இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 2
இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 2
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பெரும்பாடுபடும் சிறிலங்க அரசு மேற்கொண்டிருக்கும் அந்த முயற்சிக்கு நீங்களும் உதவுங்கள் என்றுதான் டெல்லியில் இருந்து நாராயணனனும் காவல் துறைத் தலைவர்களுக்கு அறிவாலோசனை வழங்கியுள்ளார்.
விடுதலையின் வேர் நிதியில் இல்லை!
ஓர் இனத்தின் நிதி மூலத்தை அழித்துவிட்டால், அதன் விடுதலைப் போராட்டம் செத்துவிடும் என்று இந்த இனப் படுகொலை கர்த்தாக்கள் கணக்கு போடுகின்றனர்!
தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சாத்வீக வழிகளில் நீதி பெற முடியாத நிலையிலேயே, அநீதிக்கு எதிரான நீதியாக விடுதலை வேட்கை பிறக்கிறது. அந்த வேட்கையே விடுதலை உணர்வின் வேர். அது துளிர்விட்டு, கிளைவிட்டு தழைக்கும்போது போராட்ட வடிவத்தை பெறுகிறது. அதற்குப் பிறகுதான் நிதி, பன்னாட்டு ஆதரவு என்பதெல்லாம். இது மக்களுக்காக வாழ்பவர்களுக்குப் புரியும், நாட்டின் பாதுகாப்பை அன்னிய நாட்டிற்கு அடிமைப்படுத்துபவர்களுக்கு எப்படித் தெரியும்?
அதனால்தான் கோத்தபயவலிருந்து நாராயணன் வரை குழம்புகிறார்கள். வன்னியின் மீது இரத்தக் களரியை கட்டவிழ்த்து மக்களையும் அவர்களுக்காக நின்ற புலிகளையும் துடைத்தெறிந்த பின்னரும் விடுதலைச் சிறகுகள் விரிகிறதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! முன்னெப்பொழுதையும் விட, தமிழீழத்தின் விடுதலைக்கான வேர் இப்போதுதான் வலிமையாக படர்கிறது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய இராணுவ வல்லமைகளின் பேராதரவோடு மே இரண்டாம் வாரம் வரை நடத்திய இனப் படுகொலை வன்னியில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கண்களை அது திறந்துவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணரத் தொடங்கிவிட்டன. அதுவே இவர்களை இப்படித் தறிகெட்டுப் பேசச் செய்கிறது.
இப்பேச்சுகளை தமிழினம் சட்டை செய்யத் தேவையில்லை.
சீன ஊடுறுவலிற்கு பதிலென்ன?
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டப்பட்ட காவல் துறை மாநாட்டில் இப்படி சம்மந்தமில்லாமல் பேசிய இந்திய தேச ஆலோசகர் நாராயணன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் சீனப் படைகள் ஒன்றரை கி.மீ. தூரம் ஊடுறுவி வந்தது மட்டுமின்றி, அது தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சிகப்பில் குறியிட்டுவிட்டுச் சென்றது எப்படி? என்று இன்று அனைவரும் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தொடரும்...
நன்றி : வெப்துனியா
0 கருத்துக்கள்:
Post a Comment