இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3
இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, இந்தியாவை துண்டு துண்டாக சிதறடிக்க வேண்டு்ம் என்று சீன அரசு ஆதரவு இணையத்தளத்தில் கட்டுரை வந்தது.
இதுநாள்வரை, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்தை (தவாங்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சீன அரசு, இப்போது அருணாசல பிரதேச மாநிலமே எங்களுடையது என்று கேட்கிறது! அங்குள்ள மக்கள் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ய முதலமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசு. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எட்டிய ‘சுமூக நிலை’ இவ்வளவுதான்!
இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.
இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்!
தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.
நன்றி : வெப்துனியா
0 கருத்துக்கள்:
Post a Comment