ஆங்கிலத்தில் அசத்தப் போறாங்க அரசுப் பள்ளி மாணவர்கள்


பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஆங்கிலப் பயிற்சி, மாணவர்களிடம் எளிய ஆங்கிலத்தில் தடை இல்லாமல் பேசும் தன்னம்பிக்கையை ஆசிரியர்களுக்கு அளிக்கும். ஆசிரியர்கள் பேசும் எளிமையான ஆங்கிலம், மாணவர்களையும் பேச வைக்கும்” என்று பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் தாரா வர்மா மற்றும் தீபாலி ஆகியோர் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி வகுப்பறைகளில் ஆங்கிலத்தில் பாடம் நடத்துவது தொடர்பாக, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். முதல்கட்ட பயிற்சி ஜூலையில் காருண்யா பல்கலையில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி, கோவையில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் கோவை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 83 ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பற்றி பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் தாரா வர்மா மற்றும் தீபாலி ஆகியோர் கூறியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் தமிழகம் முழுவதும் உள்ள சில அரசுப் பள்ளிகளை நேரில் பார்வையிட்டோம். அங்கு ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள், மாணவர்களின் தேவைகள் பற்றி ஆய்வு நடத்தினோம். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களிடம் பேசியதில் எந்த மாதிரி பயிற்சி தேவை என்பதை அறிய முடிந்தது. அதற்கேற்ப பயிற்சிக்கான பாடத் திட்டத்தை வடிவமைத்தோம். இதுவரை டில்லி, கேரளாவில் பயிற்சி முடிந்துள்ளது. தமிழக ஆசிரியர்கள் நன்கு ஒத்துழைக்கின்றனர்.

ஒவ்வொரு மாநில பள்ளிகளின் தேவைகளும், பாடத் திட்டங்களும் வெவ்வேறானவை என்பதால் அதற்கேற்ப பயிற்சி அளிக்கிறோம். வகுப்பறைகளில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படியான எளிமையான ஆங்கிலத்தில் பேசினால் போதும் என்பதால், வகுப்பறைக்கென தனி ஆங்கிலம் வடிவமைத்து பயிற்சி அளித்து வருகிறோம். எளிய முறை ஆங்கிலத்தில் ஆசிரியர்களை பேச வைப்பதன் மூலம் அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கம்.

தன்னம்பிக்கையுடன் ஆசிரியர் பேசும் எளிய ஆங்கிலத்தை பின்பற்றி, மாணவர்களும் தானாகவே பேச துவங்கி விடுவர். ஆங்கிலத்தில் கதை சொல்வது, கேள்வி கேட்பது, கட்டளையிடுவது, வகுப்பறை நிர்வாகம், ஒரு பாடத்தை துவங்குவதும் முடிப்பதும் எப்படி என்பதை பற்றி சுவாரஸ்யமான சிறு விளையாட்டுகளின் வாயிலாக கற்பிப்பதால் ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர் கவிதா என்பவர் கூறுகையில், “இந்த பயிற்சியில் பங்கேற்ற பின் பயம், தயக்கம், வெட்கம் போய் விட்டது. வகுப்பறை மட்டுமல்லாமல், எந்த மாதிரி சூழலையும் சந்திக்கும் தைரியம் கிடைத்துள்ளது,” என்றார்.

ஈரோட்டை சேர்ந்த பாரதி என்பவர் கூறுகையில், “அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்றாலும் இதுவரை ஊக்குவிப்போ, பேசுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை. பயிற்சியில் குழு கலந்தாலோசனை பயனுள்ளதாக உள்ளது. இதனால் பேசுவதில் தவறுகள் இருந்தாலும் உடனுக்குடன் சரி செய்து கொள்ள முடிகிறது,” என்றார்.

பயிற்சி பற்றி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “நான்கு அணிகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 3,520 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் இத்திட்டத்தின் மூலம், வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தானாக அதிகரித்து விடும்,” என்றார். இப்பயிற்சி, செப்., 26ல் நிறைவு பெறுகிறது.

நன்றி:கல்விமலர்

நல்ல முயற்சி..

பாராட்டுவோம்
...

வரவேற்போம்
....

Posted by போவாஸ் | at 3:33 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails