மீன் பிடிக்க வரட்டும் ராகுல் காந்தி ?
எம்மக்களுடன்
மீன் பிடிக்க
வருவாரா
ராகுல் காந்தி ?
தன்னை சாதாரண மனிதர், எளிமையான மனிதர் என்று காட்டிக் கொள்ளும் ராகுல் காந்தியே எம் மக்களுடன் நீ ஒரு முறை மீன் பிடிக்க எங்களுடன் கடலுக்கு வருவாயா ?
வயதானவர்களைக் கட்டிப் பிடிப்பது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, ஏழை எளியோரின் வீட்டில் தங்குவது, குடிசைகளில் உறங்குவது,சிக்கன நடவடிக்கை ரெயிலில் செல்வது, விமானத்தில் பொருளாதார வகுப்பில் செல்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
உயிரைப் பணயம் வைத்து, எந்நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன், பயத்துடன் கலக்கத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எம் மீனவ மக்கள் படும் பாடு உனக்கு தெரியவில்லையா?
இளைஞர்கள் கட்சிக்கு வேண்டும், நாட்டுக்கு வேண்டும் என்று ஆசைப் படும் ராகுல் காந்தியே, கடலில் இலங்கைக் கடற்படையிடம் அடியும் உதையும் வாங்கி வந்து இன்று சாப்பிடவதற்கு கஷ்டப்படும் எம் மீனவ இளைஞர் மக்கள் உனக்கு இளைஞராகத் தெரியவில்லையா?
உண்மையில் மக்களுக்காக வாழும் ஒரு சாதாரண மனிதன் என்றால், எங்களுடன் ஒரு முறை கடலுக்குள் மீன் பிடிக்க வரட்டும்.
தூண்டில் போட வேண்டாம், வலை வீசி மீன் படிக்க வேண்டாம். எந்த வேலையும் செய்ய வேண்டாம். எங்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் போன்று வரட்டும். அப்போது தெரியும் இவருக்கு இலங்கை கடற்படையினால் படும் பாடுகளும், வேதனைகளும்.
எம்மக்களுடன் சேர்ந்து இவரும் அடிபட்டால்தான் தெரியும், அடியின் வலியும், வேதனையும்.
இதுவே குஜராத்திலும், கொல்கத்தாவிலும் உள்ள மீனவர்கள் தாக்கப்பட்டால், காயப்பட்டால் பொறுத்துக் கொள்வீரோ ?
பதறி அடித்து ஓடி இருக்க மாட்டீரா?
பக்கம் பக்கமாய் அறிக்கைகளும் , கண்டங்களும் விட்டிருக்க மாட்டீரா?
தமிழர்களை புறக்கணிக்கும் வடநாட்டுச் செய்தி நிறுவனங்களும் ஊதி ஊதி பெரிதாக்கியிருக்காதா?
எண்ணற்ற வேதனைகளுடன் எம்மக்கள் இருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் போதாதென்று தமிழக மக்களுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டீரா.
எல்லாவற்றிற்கும் ஓர் எல்லையும் உண்டு, முடிவும் உண்டு. மறந்து விட வேண்டாம்.
காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும். நினைவில் கொள்க.
இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ள 5 விசைப் படகுகளையும், 21 மீனவர்களையும் எப்பொழுது மீட்கப் போகிறீர்கள்.?
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்கு இனியாவது ஒரு முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமா?
1 கருத்துக்கள்:
எல்லாவற்றிற்கும் ஓர் எல்லையும் உண்டு, முடிவும் உண்டு. மறந்து விட வேண்டாம்.
காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும். நினைவில் கொள்க.
nanumathy nambikail ullean
Post a Comment