சபரி மலையா ? ஊழல் மலையா ? - ஐயப்பா நீயே சொல்லப்பா.
சபரிமலை : ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் நெய் அப்பம், அரவணா, அன்னதானம் உட்பட பல்வேறு வகைகளில், சபரிமலையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில், கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இங்கு முறைகேடுகள் நடக்காத வண்ணம் தடுக்க, கேரள ஐகோர்ட் தேவஸ்வம் போர்டு உயர்மட்டகமிட்டியை நியமித்தது.
இதில் தேவஸ்வம் போர்டு சேர்மன் சி.கே. குப்தா வை தவிர்த்து, கூடுதல் முதன்மை செயலாளர் கே.ஜெயக்குமார் தலைமையில் உயர்மட்டக் கமிட்டி அமைத்தது.
அக்கமிட்டி தான், சபரிமலையில் மேற்கண்ட காலங்களில் கண்காணித்து வந்தது.
அவ்வாறு உயர்மட்ட கமிட்டி அமைத்த பிறகும், லட்சக்கணக்கில் அங்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. இதில் அங்கு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்ட நெய் அப்பம் முதல் அன்னதானம் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், கெட்டுப் போன அரவணா பாயசம் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகேடுகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி வரை நடந்துள்ளது. இவற்றை, தணிக்கை அதிகாரிகள் சன்னிதானத்திலும், பம்பையிலும் நடத்திய சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
முறைகேடுகளை மேல் அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருக்க, பல ஆவணங்களையும் மறைத்து வைத்துள்ளனர் அல்லது அழித்து விட்டனர்.
மேற்கண்ட சீசனில் அன்னதானத் திட்டத்திற்காக தனியாருக்கு சபரிமலையில் மூன்று கட்டடங்களை வழங்கிய வகையில், 40 லட்சம் ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளது. தினமும், சபரிமலையில் ஆறாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கூறி, அதற்காக போலியாக விளம்பர பலகையை வைத்து மோசடி நடந்துள்ளது.
இந்த சீசனில், பக்தர்கள் பலருக்கும் கெட்டுப்போன அரவணா பாயசம் தான் விற்கப்பட்டது. அதுவும் ஜனவரி மாதத்தில் பக்தர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட அரவணா பாயசம் டின்கள் உடைந்து நொறுங்கி போயிருந்தன.
இதுகுறித்து தபால் துறை அதிகாரிகள் பல முறை கேட்டுக்கொண்டும் கோவில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வரலாற்றில் முதல் முறையாக, தபால் துறை இதற்காக நஷ்டஈடு கேட்டுள்ளது.
பல்வேறு டிக்கெட்டுக்கள் தனியார் வங்கி மூலம் விற்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு டிக்கெட்டுக்கள் அச்சடிக்கப் பட்டன, எவ்வளவு விற்கப் பட்டுள்ளது போன்ற விவரங்கள் இல்லை.
சீசன் துவங்குவதற்கு 18 நாட்கள் முன் 4,088 டின்கள் அரவணா மற்றும் 2,937 பாக்கெட்டுக்கள் நெய் அப்பம் ஆகியவை இருந்தன. அவைகள் கெட்டுப் போய் விட்டதாகக் கூறி அழிக்கப்பட்டன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
ஏற்கனவே மகர ஜோதி விளக்கு எரிவது பொய் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
இப்போ இது வேறையா ?.
ஐயப்பா நல்ல பதிலைச் சொல்லப்பா (?). ( நீயே உண்மையாப்பா ? )
பக்தி நிறைந்த சபரி மலை இன்று முறைகேடுகள் நிறைந்த ஊழல் மலை.
0 கருத்துக்கள்:
Post a Comment