சிங்கார சென்னையில் ஓர் அவலம்


சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் 200 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் வசித்து வருகின்றன.

1962-ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை மாதவரத்தில் பால்பண்ணை தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆயிரக்கணக்கான மாடுகள் இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டன.
மாடுகளை பராமரித்தல், பால் கறத்தல் போன்ற பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அப்படி வரவழைக்கப்பட்டவர்கள் "பொட்டு ரூம்' எனப்படும் மாடுகளுக்கான தீவனத்தை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட மிகச் சிறிய அறையிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
10 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட அந்தச் சிறிய அறையில் தீவன மூட்டைகளுடன் சுமார் 200 குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தால் மாடுகளை பாதுகாக்க தனியாக ஆள்களை நியமிக்க வேண்டும் என்பதாலும், நேரம் காலம் இல்லாமல் விரும்பிய நேரத்தில் வேலை வாங்குவதற்காகவும் அவர்களை தீவன அறையிலேயே தங்க வைத்ததாக சொல்கிறார்கள்.
நாளடைவில் பால் பண்ணை நிர்வாகம் மாடுகள் வளர்ப்பதை நிறுத்தியது. அதுவரை அதனை நம்பிருந்தவர்கள் வேறு வழியின்றி அங்கேயே தங்கிவிட்டனர்.
மாடுகள் கட்டப்பட்டிருந்தத் தொழுவத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி வசிக்க ஆரம்பித்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுத் தொழுவமே 200 குடும்பங்களுக்கு இருப்பிடமாக இருந்து வருகிறது.
பால் பண்ணையில் வேலை இல்லாததால் அவர்கள் கட்டுமானப் பணிகள், வீட்டு வேலை போன்ற கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஆவின் பால் பெருக்குத் துறைக்குச் சொந்தமானதாக இருந்த மாட்டுத் தொழுவம், இப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துச் சொந்தமானதாக உள்ளது.

மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு, இலவச எரிவாயு இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் மின் இணைப்பு மட்டும் வழங்கவில்லை.

"மின் இணைப்பு பெறுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தை அணுகினால் மாட்டுத் தொழுவத்தின் உரிமையாளரான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்திடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுகிறார்கள். தடையில்லாச் சான்றிதழ் கேட்டால் "பார்ப்போம்; பரிசீலிப்போம்' என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் சான்றிதழ் கிடைக்கவே இல்லை'' என்கிறார் இங்கு வசிக்கும் பொட்ரூம் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் தலைவர் எம். கார்த்திகேயன்.
"40 ஆண்டுகளாக நாங்கள் மாட்டுத் தொழுவத்தில் இருக்கிறோம். எங்களுக்கு மாற்று இடம் தாருங்கள். அல்லது மின் இணைப்பு வழங்குங்கள் என்று மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் வரை சுமார் 500 மனுக்கள் வரை அனுப்பிவிட்டோம். எந்தப் பலனும் இல்லை'' என்கிறார் நலச்சங்கத்தின் செயலாளர் தாமஸ் அந்தோணி.

மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் 200 குடும்பங்களுக்காக 4 அடி பம்ப்புகளும், 7 தெரு விளக்குகளும், 13 கழிவறைகளும் மட்டுமே அந்தப் பகுதியில் உள்ளன. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மாதவரம் நகராட்சி செய்து கொடுத்துள்ளது.

"தெரு விளக்குகளுக்கான மின் இணைப்பு மட்டும் நகராட்சி பெற்றுத் தந்துள்ளது. மின் கம்பம், விளக்குகள், ஒயர்கள் போன்றவற்றை மக்களிடம் வசூல் செய்து மின் விளக்குகளை எரியச் செய்துள்ளோம். திருமணம், காது குத்துதல் போன்ற வீட்டு விசேஷங்களின்போது கூட மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறோம். இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் எங்கள் குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படிக்கிறார்கள்'' என்கிறார் ஞானையா. 67 வயதான இவர் பரமக்குடியில் இருந்து 1969-ல் பால் கறப்பதற்காக இங்கு வந்தவர்.

அமைச்சர் கே.பி.பி. சாமியின் தொகுதி:எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் 40 ஆண்டுகளாக மாட்டுத் தொழுவத்தில் 200 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதி மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமியின் திருவொற்றியூர் தொகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"அமைச்சர் சாமியிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். அவரும் மின் இணைப்பு பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மாதவரம் நகராட்சி மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 13 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மின் இணைப்பு கிடைப்பதற்காக முயன்று வருகிறேன்'' என்கிறார் மாதவரம் நகராட்சி 3 வார்டு கவுன்சிலர் இ. சந்திரசேகரன்.
1983-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மாட்டுத் தொழுவத்தில் உள்ள வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையை ஆவின் பால் பெருக்குத் துறை எடுத்தது. எம்.ஜி.ஆரின். தலையீட்டால் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
"மின் இணைப்பு, குடிநீர், கூடுதல் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். இல்லையெனில் 40 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கும் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்'' என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் மின் வசதி இல்லாமல், மாட்டுத் தொழுவத்தில் வசிக்கும் அவலம் அதுவும் தலைநகர் சென்னைக்கு அருகில் இருப்பது வேதனைக்குரியது. தமிழக அரசின் பார்வை தங்கள் மீது விழுமா? என்று மாட்டுத் தொழுவத்திலிருந்து அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

நாள்தவறாமல் தினமணி நாளிதழைப் படிக்கும் நம் முதல்வர், இந்த செய்தியையும் படித்திருப்பார் என்றே நினைக்கின்றேன். விரைவில் ஆவண செய்ய வேண்டும். செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி:தினமணி.

Posted by போவாஸ் | at 1:51 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails