பாரம்பரியமாக பின்பற்றிய உணவு முறை மாற்றமே நிலவும் பிரச்னைக்கு காரணம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள முக்கோணத்தில் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்டம் சார்பில், நீர் வள நில வள திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: நம் நாட்டு மக்களுக்கு உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை.

சூரிய ஒளியால் வேக வைக்கப்பட்டு விளையும் காய்கறிகளை மீண்டும் வேகவைத்து அவற்றின் சத்துகளை வீணடிக்கின்றனர். வேகவைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே உணவு என்னும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள விளைநிலங்களில் பல்வேறு ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி நுண்ணுயிர்களை கொன்று உப்புக்கண்டங்களாக மாற்றியுள்ளோம்.

மூன்று மாதம் மட்டும் கோடை காலமாக இருக்கும் வெளிநாடுகளின் விவசாய தொழில்நுட்பங்களை ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் நம்நாட்டில் புகுத்தியது, விவசாய சாகுபடியில் ஏற்பட்ட முதல் பிரச்னை. 3,000 ஆண்டு பாரம்பரியம் மிக்க நமது விவசாய சாகுபடி முறைகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களில் நிலக்கடலை மட்டுமே நம் நாட்டு விவசாயிகளுக்கு பலன் அளிப்பதாக உள்ளது.

இந்த பயிர் நைட்ரஜனை காற்றில் இருந்து இழுக்கும். நாம் விடும் மூச்சுக்காற்றில், 78 சதவீத நைட்ரஜன் உள்ளது. ஆனால், ரசாயன உர மூட்டைகளில் 40 சதவீத நைட்ரஜன் மட்டுமே உள்ளது. ஊடுபயிராக பாசிப்பயறு, தட்டை, உளுந்து போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம், விளைச்சலை அதிகரிக்கலாம். 12 ஆயிரம் வகையான பயிர்கள் நைட்ரஜன் சத்தை காற்றிலிருந்து இழுக்கும் தன்மையுடையது.

மனிதன் தான் விளைவிக்கும் பயிர்களின் கழிவுகளை மாடுகளுக்கு அளிப்பதும், மாடுகளின் கழிவுகள் வண்டு போன்ற உயிர்களுக்கும், வண்டுகள் புழுக்களுக்கும், புழுக்கள் கோழிக்கும், கோழிக்கழிவுகள் பூஞ்சையாகவும், பூஞ்சை மண்புழு உற்பத்திக்கும் உதவியாக இருந்தன.

இந்த பாரம்பரிய உணவு சங்கிலி முறையில், மாடுகள் காணாமல் போனது போன்ற மாற்றங்களே தற்போது விவசாய சாகுபடியிலும், உணவு உற்பத்தியிலும் நிலவும் பிரச்னைகளுக்கு காரணம். உணவு சங்கிலி மாற்றப்படும் முறை நெல் ரகங்களை மறைமுகமாக மாற்றியதில் துவங்கியது. இந்த முறையை மீண்டும் செயல்படுத்தினால் சாகுபடி செழிக்கும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 12:35 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails