கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி ?தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுவதால் பொது மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளிடம், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றன.அதாவது, அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணம் முழுவதையும் நோயாளிகள்தான் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள ஒருவர் செல்லும் நிலையில், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., ஆன்ஜியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதற்காக தனியார் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ.15,000 வரை செலவாகிறது. இதை நோயாளியே செலுத்தும் நிலை உள்ளது. அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டத்துக்கு எதிரான நிலையை மருத்துவமனைகள் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம்.


மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே உதவி கிடைக்கிறது. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளாமல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.


ஏற்கெனவே பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாலே, சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும். காய்ச்சலுக்குக் கூட காப்பீட்டு நிதியுதவி பெறலாம்.


ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால்தான் காப்பீட்டு உதவி கிடைக்கும் என்பது ஏழைகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இவ்வாறு தேர்வாகும் பயனாளிகள், இலவச சிகிச்சை கிடைக்கும் என நினைத்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். ஆனால் பரிசோதனை உள்ளிட்ட செலவினங்களை நோயாளிகள்தான் ஏற்க வேண்டும் என தெரியவரும்போது பலரும் சிகிச்சை பெறாமல் வீடுகளுக்குத் திரும்பி விடுகின்றனர்.


முதல்வரின் சொந்த மாவட்டத்தில்...: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கடந்த 22-ம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களில் 86 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஆனால், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்காக மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களிடம் கட்டணம் கேட்டதால் அதை செலுத்த முடியாமல் அனைவரும் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சை பெறாமல் உள்ளனர்.


மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை:


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை உள்பட எந்தவிதமான கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.


இவ்வாறு கட்டணம் கேட்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். விஜயகுமார் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது:


"கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1 லட்சம் நிதியுதவியின் கீழ், உயர் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் அல்லது சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை மதிப்பீடு பரிசோதனைகள் உள்பட எதற்கும் கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது.


திருவாரூரில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்ற முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் மருத்துவமனைகள் பரிசோதனைக் கட்டணம் கேட்டது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தவறு செய்த மருத்துவமனைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


எங்கு புகார் கூறுவது? கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறுவோரிடம், தனியார் மருத்துவமனைகள் எந்த விதமான கட்டணத்தைக் கேட்டாலும், அது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்ட குறை கேட்புக் குழுவிடம் தகுந்த ஆதாரங்களுடன் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபிக்கப்படும் நிலையில், காப்பீட்டுத் திட்ட பட்டியலிலிருந்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்றார் விஜயகுமார்.


நன்றி :தினமணி

Posted by போவாஸ் | at 7:24 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails