தொடர் சறுக்கலில் கலைஞர்முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக திமுக அறிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.


திமுக பட்டும் படாமல் இருந்தபோது, இவ்விசயத்தில் திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா அம்மையாரின் கடுமையான் கண்டனங்களையும், அறிக்கைகளையும் கண்டு சூடான திமுக தரப்பு பத்தி அறிக்கையும் விட்டுக் கொண்டு இருந்தது. அது அப்படி இது இப்படி என்று திமுகவும், அதிமுகவும் அறிக்கை போர் நடத்திக் கொண்டிருந்தது.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் கண்டனங்களைத் தெரிவித்தது உச்ச நீதி மன்றம். இதையடுத்து வழக்கினை ஒத்தி வசித்தது.


இந்நிலையில், ஊர் வாயை மூடுவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்த திமுக, "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய இணையமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி கலைஞர் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும்' என்று முதலில் அறிவித்தது.

ஓரிரு நாளில் இந்தக் கண்டனம் கூட்டம் எதிர்ப்புக் கூட்டமாக மாறியது. "முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டம்' என அறிவிக்கப்பட்டது. முக. அழகிரி தலைமையில் என்று கூட்டம் நடை பெரும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், அந்த எதிர்ப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:


"முல்லைப் பெரியாறு புதிய அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது எனவும், புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்து வாதாடி வருகிறது.


மத்திய அரசின் வழக்கறிஞரும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என கூறியிருப்பதையே இப்போதும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார்.


இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக திட்டமிட்டு இருந்த பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


திமுகவின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுப்  பிரச்சனை, சிபிஐ ரெய்டு போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஐயம் உண்டாகியுள்ளது. காங்கிரசிடம் திமுக சரண்டர் ஆனதைப் போலுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல், சிபிஐ ரெய்டு தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் தலைவர், தமிழக முதல்வர் கலைஞர் வாயெடுத்து இன்னும் கூறவில்லை. தெளிவான அறிக்கையையும் தரவில்லை.

ஆ.ராஜா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் அவர்களே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று அறிவித்த நிலையிலும்,  பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தும் கூட, கலைஞர் அவர்கள் இன்னமும் தெளிவான பதிலோ அறிக்கையோ தராமல் மெளனமாக இருக்கிறார்.

மத்தியில் மீண்டும் வந்த காங்கிரஸ் ஆட்சி, திமுகவை மட்டுமல்ல தமிழர்களையும் துச்சமென நினைத்தே செயல் பட்டு வருகின்றது.தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கிக்  கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையப் போகும் சூழ்நிலையைப் போல் இருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுகவை வெளியேற்றாமல், காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக தானாகவே வெளியே செல்லக் கூடிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது காங்கிரஸ். அதற்கான காய்களை பக்குவமாகவே நகர்த்துவது போலத் தெரிகிறது.


விரைவில் சமரசம் ஏற்பட்டு விஷயங்கள் அமுங்கிப் போகலாம் அல்லது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக பிரிந்து வெளியே வந்து, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் நிலை உண்டாகலாம். அப்படியொரு நிலை வந்தால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாவது நிச்சயம். வைகோ வெளியேற்றப் படுவார். அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில், விஜயகாந்த் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது.

எந்த விசயத்தையும் நன்கு ஆராய்ந்து யோசித்து, ராஜ தந்திரத்துடன் செயல் படுத்தும் பக்குவமிக்க தலைவர் கலைஞர் இந்த விசயத்தில் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார். எப்படி கோட்டைவிட்டார் என்று புரியவில்லை. ?


கலைஞரின் சறுக்கலின் பின்னணி என்ன ? பின்வாங்கலுக்கான காரணம் என்ன ?.. விளக்கம் வருமா கலைஞரிடமிருந்து.....பொறுத்திருந்து பார்ப்போம்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலந்து கொண்டு, ஏலத்தினை எடுத்த யுனிடெக் & ஸ்வான் கம்பெனியில், ஸ்வான் கம்பெனி மத்திய அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு சொந்தமானதாகும். தற்போது நடை பெற்ற மகாராஷ்ட்ரா மாநில தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரு கட்சிகளுக்குள் யாருக்கு என்ன பதவி, என்ன அமைச்சகம், என்ன பொறுப்பு என்பதில் பலமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது.


கடந்த, 1999ம் ஆண்டு இரு கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தப்படி உள்துறை, நிதி, மின்சாரம் ஆகிய இலாகாக்களையும், துணைமுதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகிய பதவிகளையும் தேசியவாத காங்கிரசே வைத்துக் கொண்டு, முதல்வர் பதவியை காங்கிரசுக்கு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. 2004ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகும் இதே பார்முலா அமல்படுத் தப்பட்டது. இந்த முறை அதிக இடங்களை பெற்றுள்ள காங் கிரஸ், முக்கிய இலாகாக்களை குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணையமைச்சர் பிரபுல் படேலை அக்கட்சி அறிவித் துள்ளது. இவர், திக்விஜய்சிங்குடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இருப்பினும், நேற்று இரவு வரை எந்த ஒரு சுமுக உடன்பாட்டையும் இவர்களால் எட்ட முடியவில்லை. சரத் பவார் கட்சி ரொம்பக் கறாராகக் இருக்கிறதாம்.
அதனால்தான், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டைப் பயன்படுத்தி, அதிரடியான தொடர் ரெய்டுகளின் மூலம் சரத் பவாருக்கு கொஞ்சம் ஆட்டம் கொடுத்து அவரை கண்ட்ரோல் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் இதுதான் ரெய்டுக்கான உண்மையான காரணம் என்றும் ஒரு பக்க பேச்சாக இருக்கிறது.
எது உண்மை?
விரைவில் தெரியவருமா?...அமுங்கிப்போகுமா ? பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 1:57 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails