புத்தகங்களை விட மனிதனை படித்தவன் நான் - கமலஹாசன்.
ஒரு காலத்துல விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத்துணியோடு பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடுச்சு!'' - எடுத்தவுடனேயே வெளிப்படையாக பேசத் தொடங்குகிறார் கமல்.
'கமல் 50 - ஒரு தொடரும் சரித்திரம்' நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது, விஜய் டி.வி. இந்த கொண்டாட்டங்களுக்கிடையே கமலை அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தோம். லேட்டஸ்ட் 'ஸ்பைக்' ஹேர்ஸ்டைலில் இன்னும் ஹேண்ட்ஸம்மாக கமல். சினிமாவில் பயணித்த இந்த ஐம்பது வருடங்களில் தட்டிக் கொடுத்தவர்களையும், சிந்திக்க வைத்த தருணங்களைப் பற்றியும் கமல் பேசிய விஷயங்கள் கமலைவிட அழகு!
என்னை உற்சாகப்படுத்திய கேள்வி!
''குடும்பத்தோட நான் வளர்ந்த சூழல்தான் என் சினிமா பயணத்தின் ஆரம்பம். எனக்கு ஐந்து வயசு இருக்கும்போதே எந்த விஷயமா இருந்தாலும் 'நீங்க என்ன நினைக்கிறீங்க?ன்னு என்கிட்ட வீட்ல கேட்பாங்க. இந்தக் கேள்வியை கேட்டாலே உற்சாகமாகிடுவேன். சின்ன வயசில் என்னுடைய கருத்துக்குக் கொடுத்த முக்கியத்துவமும் மரியாதையும்தான் என்னுடைய தனித்தன்மையை எனக்கே புரிய வைச்சது.
பொறுப்புகள் தந்தவர்!!
விஜய் டி.வி.யின் 'கமல் 50- ஒரு தொடரும் சரித்திரம்' நிகழ்ச்சியில் 16 எபிஸோடுகள் என்னைப் பற்றி பாலசந்தர் சார் பேசியிருக்கார். அவரைப் பற்றி நான் பேச 36 எபிஸோடுகள் தேவை. அவருடன் 36 படங்கள் பண்ணியிருக்கேன். ஆரம்பத்துல அவர் சொல்லிக் கொடுத்ததை நடிச்சிருக்கேன். பல படங்களுக்குப் பிறகு 'எல்லாம் கமல் பார்த்துப்பார்'ன்னு நம்பி பொறுப்புகளைக் கொடுப்பாரு. சினிமாவில் அவர் எனக்குக் கொடுத்தது எல்லாமே டபுள் புரமோஷன்தான்.
தட்டிக் கொடுத்தவர்கள்!
'களத்தூர் கண்ணம்மா'வில் 'எவ் வளவுப்பா சம்பளம் வேணும்?'னு பெரியவர் கேட்டார். 'பிளைமோத் காரும், ரெண்டு அல்சேஷன் நாய்க்குட்டியும் வேணும்'னு கேட்டேன். 'கெட்டிக்காரன்பா'ன்னு தட்டிக் கொடுத்தாரு. சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவர், நூல்விட்டு காத்தாடி விட சொல்லிக் கொடுத்தவர், இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாருமே எனக்கு வாத்தியார்தான்!
படிச்சாதானா?
சில சமயங்களில் சில இடங்களில் கல்வித்தகுதி என் ஆசைகளுக்குத் தடையாக இருந்திருக்கு. சமீபத்தில் ஃபிளையிங் கிளப்பில் சேர விரும்பினேன். அப்ளிகேஷன் ஃபார்மில் தேவைப்படும் கல்வித்தகுதி இல்லாததுனால எனக்கு இடம் கிடைக்கலை. இங்கே பரீட்சை எழுதிதான் புத்திசாலின்னு நிரூபிக்க வேண்டியிருக்கு. அதனால அடிப்படை கல்வித் தகுதிங்கிற 'கேட் பாஸ்' நிச்சயம் தேவை. படிப்பை முடிச்சிடுங்கன்னு மகள்களிடம் சொல்லிட்டு வரேன்!
விட்டுக் கொடுக்கமாட்டேன் !
ஸ்ருதியின் பிறப்புச் சான்றிதழில் மதத்துக்கான இடத்தை வெற்றிடமாதான் விட்டிருக்கிறேன். போராடித்தான் அந்த சான்றிதழை வாங்கினேன். என்ன மதம்னு அப்ளிகேஷனில் கேட்காத பள்ளியில்தான் மகள்களைப் படிக்க வைச்சேன். என்னுடைய கொள்கைகளை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்.
மனிதர்களைப் படிச்சவன்!
புத்தகங்களை விட நிறைய மனிதர்களைப் படிச்சிருக்கேன். அனந்துவைப் படிச்சேன், பாலசந்தர் சாரை இன்னும் படிச்சிட்டிருக்கேன்.
விஜய் டி.வி.யில் தொடரும் சரித்திரம்!
என்னைப் பற்றி ஒரு சரித்திர நிகழ்ச்சின்னு சொன்னவுடன் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், விஜய் டி.வி. இந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்திக்காட்டுவாங்கன்னு ஒப்புக்கிட்டேன். கமலும் காதலும், கமலும் தமிழும் எபிஸோடுகள் இதமான நினைவுகள்.
ஹெல்த் இஸ் வெல்த்!
புகை பிடிப்பதில்லை... 'பிடிச்சதேயில்லை’னு சொல்லமாட்டேன். பிடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே நிறுத்திவிட்டேன்!
ரஜினி!
ஒரு போட்டி இருந்தால்தான் நமக்குள் ஒரு உற்சாகம் கிடைக்கும். அந்த ஒரு ஆரோக்கியமான போட்டி எனக்குக் கொடுத்தவர் ரஜினி! அந்தப் போட்டிக்கிடையே எங்களுக்குள் இருக்கிற நட்பு கொள்ளை அழகு...''
நன்றி: குமுதம்
0 கருத்துக்கள்:
Post a Comment