டந்த வெள்ளிக்கிழமை பசும்பொன் கிராமத்தில் நடந்து முடிந்த முத்துராமலிங்கத்தேவரின் 102-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில், மத்திய ரசாயன மற்றும், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிதான் முழுக் கதாநாயகன்.

முக்குலத்தோர் மக்களின் முழுமையான ஆதரவைக் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று நேற்றுவரை இருந்த இமேஜை முழுவதுமாக உடைத்து, அந்த மக்களின் செல்வாக்கையும், ஆதரவையும் தனது பக்கமும், தி.மு.க.வின் பக்கமும் ஒரே நாளில் மாற்றிக் காட்டி, புது இமேஜுடன்தான் பசும்பொன்னில் வலம் வந்தார், மு.க. அழகிரி.

தி.மு.க.விற்கும் அதன் அமைச்சர்களுக்கும் காலை பத்துமணி முதல் பதினொரு மணி வரை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மேளதாளங்களின் முழக்கத்தோடு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார், மு.க.அழகிரி. கட்சி ரீதியாக மட்டுமல்லாது,பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் சார்பாகவும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர், அழகிரியின் காது படவே எழுப்பிய கோஷங்கள் ஒவ்வொன்றும் பசும்பொன் கிராமத்தையே `அதிரி புதிரி' ஆக்கின.

`முக்குலத்தோரைக் காக்கும் கடவுளே... முக்குலத்தோரின் நாயகனே... முதல்வர் கலைஞர் பெற்றெடுத்த வருங்கால முதல்வரே... அஞ்சுகத்தம்மாளின் அஞ்சாத பேரனே' என்றெல்லாம் எழுப்பப்பட்ட கோஷங்களைக் கேட்டு, மு.க.அழகிரியின் முகத்தில் பரவச ரேகைகள் படர்ந்தன. பசும்பொன் கிராமம் முழுக்க அழகிரியின் கட்அவுட்டுகளும், ஃபிளக்ஸ் போர்டுகளும் மலைக்க வைத்தன. அதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே தேவர் நினைவிடத்துக்குள் நுழைந்தார் அழகிரி.அங்கேயும் அவரை முக்குலத்தோரின் கதாநாயகனாகச் சித்திரித்து எழுப்பப்பட்ட கோஷங்கள், அந்த நினைவிட வளாகத்தையே அதிர வைத்தன. வருடாவருடம் தவறாமல் தேவர் நினைவிடத்துக்கு வந்து போகும் பொதுமக்கள் (இவர்களும் முக்குலத்தோர்தான்) இந்த அதிரடியான மாற்றத்தை அதிசயத்தோடு பார்த்தனர். தேவர் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அழகிரிக்கு, அங்கிருந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகள் விபூதி வைத்தபோது அதனை பவ்யமாய் ஏற்றுக்கொண்டார் அழகிரி. விபூதித் தட்டில் 10,000 ரூபாயைக் காணிக்கையாகக் கொடுத்தார்.

அழகிரியும், அவருடன் வந்திருந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் தேவர் நினைவிடத்தை விட்டு வெளியே வந்தபோது, திருச்செந்தூர் இடைத்தேர்தல் பற்றிய தகவல் சென்னையிலிருந்து அழகிரியின் அருகில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு போன் மூலம் வந்து சேர்ந்தது. அதனை அவர் அழகிரியின் காதில் போட, அதனைக் கேட்ட மற்ற அமைச்சர்கள், `தேவர் நினைவிடத்தில் இருக்கும்போது இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துருக்குண்ணே. இது நல்ல சகுனம்தான். வெற்றி நமக்குத்தாண்ணே' என்று கூற, அதனை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட அழகிரி, தங்கம் தென்னரசு பக்கம் திரும்பி, `தேதி என்றைக்கு அறிவிச்சுருக்காங்க?' என்று கேட்டார்.

`ஜனவரி 30-ம் தேதிக்குள் என்று அறிவிச்சு ருக்காங்க. ஜனவரி 30-ம் தேதியா இருந்தா நல்லா இருக்கும்ணே. ஏன்னா, அன்றைக்குத்தானே உங்க ளோட பிறந்த நாள்' என்று உற்சாகத்தோடு சொல்ல, அந்த உற்சாகம் அழகிரியையும், ஏனைய அமைச்சர்களையும் தொற்றிக்கொண்டது. இந்த உரையாடலைக்கேட்டு குதூகலமடைந்த தி.மு.க. தொண்டர்கள், அந்த வினாடியே திருச்செந்தூர் இடைத்தேர்தலையும், மு.க.அழகிரியையும் இணைத்து கோஷங்கள் எழுப்பினர்.

`மழை வருவதற்குள் பசும்பொன் கிராமத்தை விட்டுச் சென்று விட வேண்டும்' என அழகிரியுடன் வந்த அமைச்சர்கள் அவரிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விட்டால்தானே?

போலீஸாரால் போடப்பட்டிருந்த ஐந்து அடுக்குப் பாதுகாப்புகளையும் மீறி அழகிரியை நெருக்கித் தள்ளினார்கள். ஒருவழியாக, அவர்களிடமிருந்து மீண்டு, காரில் ஏறி, பசும்பொன்னுக்கு வந்தபோது 600 வாகனங்கள் புடைசூழ எப்படி `கெத்தாக' வந்தாரோ... அந்த `கெத்து' கொஞ்சம் கூட குறையாமல் கிளம்பிப் போனார் மு.க.அழகிரி. அதற்கும் முன்னதாக ஷ்ரீதர் வாண்டையாரின் பந்தலுக்குச் சென்று அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார், அழகிரி.
இதுபோன்ற காட்சிகளெல்லாம் ஜெயலலிதா பசும்பொன்னுக்கு வரும்போதுதான் நடக்கும். இந்த வருடம் அதைப் போன்ற ஆரவாரமான கூச்சல்களும், கோஷங்களும், வரவேற்புகளும் மு.க.அழகிரிக்கு நிகழ்ந்திருப்பது எல்லோரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது.

இத்தனைக்கும் அழகிரி பசும்பொன்னுக்கு வருவது இரண்டாவது தடவை மட்டுமே. `முக்குலத்தோரின் கோட்டை `அ.தி.மு.க.' என்ற அசைக்க முடியாத இமேஜை, மு.க. அழகிரி அடித்து உடைத்துவிட்டார்' என்றுதான் அங்கு வந்திருந்த எல்லோருமே ஆச்சரியத்துடன் விவரித்தார்கள்.

`எப்படி நடந்தது இந்த அதிரடியான மாற்றம்?' என்று தி.மு.க.வினரிடம் விசாரித்தபோதுதான் `இப்படி ஒரு அஸைன்மெண்ட்டை பசும்பொன்னில் நடத்திக் காட்ட வேண்டும்' என்று கட்சியினருக்கு கட்டளையிட்டதே அழகிரிதான் என்ற விஷயமும், அதன் பின்னணியும் தெரிய வந்தது.

அதுபற்றி தி.மு.க.வினரே நம்மிடம் விவரித்தார்கள்.
``28-ம் தேதி சென்னை வானகரத்தில் கூடிய அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, ராவணன், கம்ஸன், நரகாசுரன் போன்ற அரக்கர்களோடு தி.மு.க.வையும், தலைவர் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினார். தி.மு.க.வையும் கலைஞரையும் அழிக்க வந்த அவதாரம்தான் அ.தி.மு.க.வும் தானும் என்பது போலவும் ஜெயலலிதா பேசினார். அந்தப் பேச்சு அண்ணன் அழகிரியை ரொம்பவே டென்ஷன்படுத்திவிட்டது. அந்தம்மாவுக்கு உடனடியாக பதிலடி தர வேண்டும். எப்படித் தரலாம் என்று அவர் யோசித்தபோதுதான், தேவர் ஜெயந்தி ஞாபகம் அவருக்கு வந்தது.
முக்குலத்தோரின் அபரிமிதமான செல்வாக்கைக் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்ற இமேஜை பசும்பொன்னில் வைத்தே தகர்த்துக்காட்ட வேண்டும்.
அதுதான் அந்தம்மாவுக்கு தான் தரும் சரியான பதிலடியாக இருக்கும் என்று அண்ணன் அழகிரி நினைத்தார். உடனே தனது முக்குலத்தோர் சமுதாய தளபதிகளையும், தமிழக அமைச்சர்களையும் அழைத்து இந்த அஸைன்மெண்ட்டைக் கொடுத்தார். அவர்களும் இரண்டே நாளில் முக்குலத்தோர் மக்களை ஆயிரக்கணக்கில் திரட்டி சாதித்துக் காட்டி விட்டார்கள். அந்தம்மாவுக்கு அடுத்த பதிலடி கொடுக்க திருச்செந்தூர் இடைத்தேர்தல் வருகிறது. அதிலும் அ.தி.மு.க.வுக்குத் தோல்வியையே அண்ணன் அழகிரி புதுவருடப் பரிசாகத் தருவார்'' என்றனர். எந்த வருடமும் இல்லாத அதிரடி அதிசயமாக இப்படியோர் ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டிய மு.க.அழகிரி, முக்குலத்தோர் மக்களை குஷிப்படுத்தும் விதமாக ஏதாவது அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார். அதிலும் குறிப்பாக, மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரைச் சூட்டுவது பற்றி ஏதாவது நல்ல செய்தியை அவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் அவர்கள்.

நன்றி : குமுதம்

Posted by போவாஸ் | at 11:38 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails