தலைமுறைகளை பாதிக்கும் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள்


மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன், பி.டி. கத்திரிக்காய் வரிசையில் அடுத்து மரபணு மாற்றப்பட்ட ஆடு, செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

பி.டி. பருத்தி பயிரினங்கள் ஏற்கெனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது உருவாக்கப்பட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் இந்திய சந்தைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


அந்த வகையில் இந்த ஆடுகளை வெளிநாடுகளில் பயன்படுத்திய பிறகு, மெதுவாக இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இது நமது தலைமுறையை பாதிக்கும் விஷயமாகும் என்று மரபணுவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் சுதாகர் எச்சரித்துள்ளார்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி. டி.  கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிடலாம்' என்று மத்திய அரசு அண்மையில் பரிந்துரை செய்தது. இது விவசாயிகள் மத்தியில் பலத்த புயலை கிளப்பியது.


"பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே, வணிக ரீதியில் பயிரிட முழுமையான அனுமதி தரப்படும்' என்று மத்திய அரசு தெரிவித்தது.


மரபணு மாற்றப்பட்ட ஆடு...: இது ஒருபுறமிருக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இப்போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இந்த வகை ஆடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.


மருந்தாகவும் வந்துவிட்டது!   இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாட்டில் இருந்து பெறப்படும் பாலில், மனித உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தரும் (அதாவது ரத்தம் கட்டிகளாக மாறாமல் தடுக்கும்) "ஆன்டி திராம்பின்' என்ற புரதம் இருப்பதாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் "ஏட்ரின்' என்ற மருந்தாகவும் சந்தையில் வெளிவந்துள்ளது.


மரபணு மாற்றப்பட்ட செம்மறியாடு...:  அடுத்து மரபணு மாற்றப்பட்ட செம்மாறியாடுகளும் உருவாக்கப்பட்டு விட்டன. இது இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.


மாதவிடாய் பிரச்னைக்கான தீர்வு:  இந்த செம்மறியாட்டில் இருந்து பெறப்படும் பாலில், கருமுட்டை வெளிவராத பிரச்னையை (சிஸ்டிக் பைபுரோசிஸ் என்ற நோய்) சரிசெய்யக் கூடிய புரதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்களுக்கு இது மருந்தாக அமையும் என்று தெரிகிறது.


பி.டி. காட்டன் பருத்தி: மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன் பருத்தி, இந்தியாவில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இப்போது பி.டி. கத்திரிக்காயை பயிரிடலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மேலும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்கும்.


இந்த சர்ச்சைகள் முழுவதும் அடங்குவதற்குள் அடுத்து மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் நம் நாட்டு சந்தைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.


தலைமுறைகளை பாதிக்கும்...:இதுபற்றி மரபணுவியல் தொடர்பான ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் சுதாகர் கூறியதாவது:


ஆந்திரத்தின் வாரங்கலில் மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி செடிகளை சாப்பிட்ட ஏராளமான ஆடுகள் இறந்தன. இது நச்சுத்தன்மையைக் கொண்டதா? என்ற உண்மையை அறிய முற்பட்ட நேரத்தில், இந்தியாவில் சோதனைகளை மேற்கொள்ள போதிய ஆய்வுக் கூடங்கள் இல்லை. பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.


இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு அளவில் பயன்படுத்திய பிறகு நமது நாட்டுக்கு கொண்டு வரலாம். இந்த ஆடுகளை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்தலாம்; உணவுப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது.


ஏனெனில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளையோ, பருத்தியையோ முழு அளவில் ஆராய்ச்சி செய்ய நவீன ஆய்வுக் கூடங்கள் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆடுகளும் இப்போது வந்துவிட்ட நிலையில் இவைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆராய்வதற்கு நவீன ஆய்வுக்கூடங்கள் அவசியமாகும்.

இந்த சோதனைகள் நமது நாட்டிலேயே செய்யப்பட்டு, மக்களுக்கு அதன் நன்மை, தீமைகளை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனெனில் இது நமது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் விஷயமாகும்' என்றார்.

Posted by போவாஸ் | at 6:12 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails