சென்னையில் பிரமாண்ட திரைப்பட நகரம்

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
1952-ம் ஆண்டு, என்னுடைய 28-வது வயதிலிருந்து தமிழ் திரைப்படத் துறையில் பங்காற்றி வருகிறேன். இப்போது எனக்கு வயது 86. இப்போதும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

திரைப்படங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் வருமானத்தை அருந்ததி மாணவ, மாணவிகள், ஏழை எளியோர், நலிந்த திரைப்படக் கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறேன். இதேபோல மற்ற திரைப்படக் கலைஞர்களும் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

நமது நாடு, பலதரப்பட்ட கலைகளுக்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. அதிலும் தென்னிந்தியாவின் பங்கு போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நமது திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறைகள் நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தால் வரையறுக்கப்பட்டு சிறந்து விளங்குகின்றன.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு இன்றியமையாதது. அதற்கு ஈடாக தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு சமுதாய பின்புலத்தை திராவிட இயக்கம் ஏற்படுத்தி தந்தது. அதன்மூலம் சினிமாவை சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது.

சினிமாவின் வளர்ச்சிக்கு திமுக அரசு ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளது. 1989-ல் 54 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியை 40 சதவீதமாகக் குறைத்தோம். 1998-ல் அதை 30 சதவீதமாகவும் 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தோம். தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் சலுகை, படப்பிடிப்புக் கட்டணங்களை குறைத்தது, மாநில அரசு விருதுகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு, திரைப்படங்களுக்கான நல வாரியம் அமைத்தது என ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறோம்.

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை மிக வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. நம்முடைய திறமைகளை மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. 2008-ல் ரூ.58 ஆயிரம் கோடியாக இருந்த இந்திய ஊடகத் துறையின் வர்த்தகம், 2013-ல் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நமது ஸ்டுடியோக்களின் தரமும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறனும் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன. சோனி பிரதர்ஸ், வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் சென்னையை மையமாகக் கொண்டு இந்திய நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. இது தென்னிந்திய சினிமாவை மேலும் வளர்ச்சிக்குள்ளாக்கும்.

தமிழகத்தின் கலை, பொழுதுபோக்குத்துறை நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்தை சர்வதேச அளவில் கலை, பண்பாடு, பொழுதுபோக்கு மையமாகத் திகழச் செய்ய வேண்டும். அந்த இலக்கை நோக்கியே நம்முடைய முயற்சிகள் அமைய வேண்டும் என்றார்.

விழாவில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுப் பேசினார்.

மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஹிந்திப் படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Posted by போவாஸ் | at 5:19 PM

2 கருத்துக்கள்:

ரோஸ்விக் said...

என்னத்தை சொல்றதுன்னு தெரியலப்பா...அதுனால அப்பீட்டு....:-)

போவாஸ் said...

நன்றி ரோஷ்விக்கண்ணா.

Post a Comment

Related Posts with Thumbnails