மாலுமி விஜயகாந்தின் அறிக்கைக்கு கலைஞரின் நெத்தியடி பதில்.


ஊனமுற்றோருக்கு யாருடைய பரிந்துரையும் இன்றி நன்மைகளை செய்து வருகிறோம் என்று 'மாலுமி' விஜயகாந்தின் அறிக்கைக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இன்று (நேற்று) உலக உடல் ஊனமுற்றோர் தினம். ஊனமுற்றோர் தன்னம்பிக்கை பெற்று பொருளாதார நிலையில் கவலை தவிர்த்து நிற்கும் நிலையை அடையச் செய்ய சிறப்புக் கல்வி அளித்தல், வாழ்க்கைத் தொழில் பயிற்சி அளித்தல், பணியிலே அமர்த்துதல், சுயவேலைவாய்ப்புக்கு உதவி அளித்தல், உதவி உபகரணங்களை இலவசமாக வழங்குதல் ஆகியவை அடங்கிய விரிவான மறுவாழ்வு அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கழக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஊனமுற்றோருக்கு உதவிட வேண்டும் என்பதில் கழக அரசைப் பொறுத்தவரையில் வேறு யாருக்கும் குறைந்ததல்ல என்பதை ஊனமுற்றவர்களே நன்கறிவார்கள். ஊனமுற்றவர்களுக்கு உண்மையாக உதவிட வேண்டுமே தவிர, வெறும் அறிக்கைகளாலே மட்டும் அவர்களுக்கு இது செய்தேன், அது செய்தேன் என்று எழுதிவிட்டால் மாத்திரம் அவர்களுக்கு நன்மைகள் விளைந்திட முடியாது.

இந்த நாளையொட்டி ஊனமுற்றோரின் வாழ்க்கை மேம்பட கழக அரசில் என்னென்ன நலத்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதை சுருக்கமாக எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

2006 2007ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் இத்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை சுமார் ரூ.39 கோடியாகும். 2007 2008ல் இது ரூ.78 கோடி அளவிற்கு கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. 2009 2010ல் இது ரூ.107 கோடியாக உயர்த்தப்பட்டது என்றால், ஊனமுற்றோர்மீது கழக அரசுக்கு உள்ள உண்மையான அக்கறையைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக முன்மாதிரி திட்டமாக "தசை சிதைவு'' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தில் ஆண்டொன்றிற்கு 1000 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

கடும் ஊனமுற்றோருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.500 வழங்கும் திட்டத்தில் தற்போது 10,000 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

60 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மனவளர்ச்சி குன்றியோருக்கு உச்சவரம்பின்றி மாதம் ஒன்றிற்கு ரூ.500 வீதம் பராமரிப்பு உதவித் தொகையாக 50,600 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

2007 2008ல் 20,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித் தொகை, கடந்த ஆண்டில் மேலும் 30,600 மனவளர்ச்சி குன்றியோர் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 50,600 நபர்கள் பயன்பெறும் வகையில் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களில் 61,600 நபர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி, ஊனமுற்றோரிடம் அக்கறை கொண்ட ஆட்சி என்பதால்தான், ஊனமுற்றோருக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஊனமுற்றோர் நலவாரியம் அமைத்து ஆணை யிடப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் நலவாரியம் மூலம் செயல்படும் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து இதுவரை 3471 நபர்கள் பயனடையும் வகையில் மொத்தம் ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.

450 பேருக்கு கல்வி உதவித் தொகையும்   115 பேருக்கு திருமண உதவித் தொகையும்   17 பேருக்கு மகப்பேறு உதவித் தொகையும்   57 பேருக்கு மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான உதவித் தொகையும்   180 பேருக்கு ஈமச் சடங்கிற்கான உதவித் தொகையும்   2 பேருக்கு விபத்திற்கான நிவாரணத் தொகையும்   100 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகளும்   150 பேருக்கு பொது இடங்களில் வியாபாரம் செய்வதற்கான பெட்டிக் கடைகள் வைக்க உதவித் தொகையும்   2250 பேருக்கு கையுறை மற்றும் முட்டிப்பட்டை வழங்கும் திட்டமும்   150 பேருக்கு சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகையுமாக மொத்தம் 3,471 பேருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அளவிற்கு இந்த வாரியத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஒதுக்கிய நிதிக்கு மேலாகவே தொகை செலவிடப்பட்டிருக்கும்போது, அதனை மூடி மறைக்கும் வகையில் "போதுமான நிதி ஒதுக்கவில்லை என்றும், வாரியம் என்ற பெயரில் ஊனமுற்ற மக்களை ஏமாற்றுகின்ற வேலை" என்றும் ஒரு சிலர் அறிக்கை விட்டிருப்பது எத்தகைய மவுடீக (கீழ்த்தரமான) அரசியல் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ளவே செய்வார்கள்.

ஊனமுற்றவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின்கீழ், 2006 2007ல் 19,982 பேர்களுக்கும், 2007 2008ல் 20,818 பேர்களுக்கும், 2008 2009ல் 31,243 பேர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாண்டுகளில் இந்த திட்டத்திற்கு அரசு செலவிட்ட தொகை ரூ.28.35 கோடிகளாகும்.

ஊனமுற்றோருக்கென வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ், திருமண செலவிற்கென ரூ.10,000மும்; அத்துடன் அவர்களின் வருங்கால தேவையை கருத்தில் கொண்டு தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.10,000மும் ஆக மொத்தம் ரூ.20,000 வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும் ரூ.10,000 ஏழரை ஆண்டுகளுக்கு பின் இருமடங்காக கிடைக்கப்பெறும்.

ஊனமுற்ற நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் இலவசமாக வழங்கும் திட்டம் 2007 2008ம் ஆண்டு முதல் கழக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 2007 2008 மற்றும் 2008 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 120 ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவசமாகவும், பணிக்குச் செல்லும் 580 ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.10,000 வீதம் மானியமாகவும் வழங்கப்பட்டு, இதற்கென ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது.
மேலும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலம் இந்த ஆண்டு 100 ஊனமுற்ற நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் வழங்க ரூ.34.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் சங்கங்களின் பிரதிநிதிகளை 19 8 2007 அன்று நானே நேரில் சந்தித்து, பின்வரும் மறுவாழ்வு உதவிகளை உடனடியாக அறிவித்தேன்:

300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றோரைக் கொண்டு சிறப்பு நேர்வாக நிரப்பப்படும் என்று அறிவித்து, அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பிற்கு 3 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதிப்படுத்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்ற நபர்களுக்கு அரசு பேருந்துகளில் 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவீத விளிம்புத்தொகையினை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி பெறும் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்வி கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரண தொகையைப் போலவே இதர வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

ஊனமுற்றோருக்கென மாநில கொள்கை ஏடு வெளியிடப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் மறுவாழ்விற்காக இவ்வாண்டு மானியக் கோரிக்கையில் பின்வரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

ஊனமுற்றோருக்கு இலவசமாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையினை 20,000 லிருந்து 50,600ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.

1 8ம் வகுப்பு வரை பயிலும் உடல் ஊனமுற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கும், ஊனமுற்றோர் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மானியம் வழங்கவும், கடும் ஊனமுற்றோர் பராமரிப்பு உதவித்தொகை பெறவும் ஊனமுற்றோர் உதவி உபகரணங்கள் பெறவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பு ரூ.12,000 என்பதை ரூ.24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

செவித்திறன் குறையுடைய 6000 நபர்களுக்கு காதொலி கருவி மற்றும் சூரிய ஒளியினால் சக்தி பெறும் பேட்டரிகள் வழங்க ஒரு சில நாட்களில் ஆணை வெளியிடப்பட உள்ளது.

பார்வையற்ற நபர்களுக்கு 77 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோரை ஊனமுற்றோரே திருமணம் செய்து கொண்டால் ரூ.20,000 உதவித்தொகை வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க. அரசு ஊனமுற்றோருக்கு யாருடைய பரிந்துரையையும் எதிர்பார்க்காமலே இத்தகைய நன்மைகளையும், சலுகைகளையும் ஆற்றி வருகின்றது. இன்று உலக உடல் ஊனமுற்றோர் தினம் என்ற வகையில் அதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்த விவரங்களையெல்லாம் தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். ஊனமுற்றவர்களுக்கு மேலும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடியுமோ அந்த அளவிற்கு கழக அரசு தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இந்த நாளில் உறுதி கூறுகிறேன்.

Posted by போவாஸ் | at 12:10 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails