போதும் இந்த கண் துடைப்பு நாடகம்.
போதும் இந்த கண் துடைப்பு நாடகம்.
பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா? விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.
2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.
நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.
ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன? மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே!
அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?
இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?
பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.
இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்? எப்படி? எப்போது ?
நன்றி: தினமணி.
1 கருத்துக்கள்:
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
வேலையே செய்யாமல் அல்லது இழுத்தடித்து செய்யும் அதிகரிகளே! உங்கள் மனசாட்சிகளாவது சிறுது வேலை செய்யட்டும். உங்கள் மன நிலையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும், நம் சமுதாயத்துக்கும் நல்லது.
Post a Comment