ஆந்திரா, கர்நாடகா, கோவாவில் பெரு மழையால் பல லட்சம் மக்கள் பாதிப்பு. உயிரிழப்பு 190.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் பேய் மழை காரணமாக, 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. இருமாநிலங்களிலும் மழை காரணமாக 130 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனிதத் தலமான மந்திராலயம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.


கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிஜப்பூர், பகல்கோட், ராய்ச்சூர், குல்பர்கா ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய ஆறுகளிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக் கூரை மேல் ஏறி நிற்கும் பரிதாபக் காட்சியை காண முடிகிறது.


விமானப் படைக்கு சொந்தமான 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 32 படகுகள் மூலம் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பாரம்பரிய புகழ் பெற்ற ஹம்பி, தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. அங்கிருந்து தண்ணீரை அகற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ராய்ச்சூர் - ஐதராபாத், பிஜப்பூர் - குல்பர்கா, கர்வார் - மங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கான ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு நாட்களில் பெய்த மழைக்கு மட்டும் இதுவரை கர்நடாகாவில் மட்டும் 90 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடியூரப்பா, ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வதாக இருந்தது. வானிலை மோசமாக இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கருணாகர் ரெட்டி கூறுகையில்,"பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு ஆய்வுக் குழுவை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மாநிலத்தின் 80 சதவீத பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உருவாகியுள்ளது' என்றார்.


முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக, நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும். மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்' என்றார்.


மந்திராலயாவில் பயங்கரம்: ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெகபூப் நகர், கர்னூல் மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பலத்த மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. படகுகள் மூலமும் மீட்புப் பணி நடந்து வருகிறது. புனிதத் தலமான மந்திராலயாவில் ஒன்பது அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இங்குள்ள சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் 150 மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள விடுதியின் கூரையில் ஏறி, பாதுகாப்பாக நின்று கொண்டனர். அதே போல பக்தர்கள் சிலரும், இரவு முழுவதும் கண்விழித்தப்படி மாடிவீடுகளில் அமர்ந்தபடி அச்சத்துடன் இருந்தனர். மந்திராலயத்தில், நிவாரணப் பணிகள் மாவட்ட கலெக்டர் நேரடிப் பார்வையில் நடக்கின்றன. அப்பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.


கடந்த  ஆண்டுகளில் காணாத மழை, வெள்ளம் என்பதால் பாதிப்பு குறித்து முதல்வர் ரோசய்யா, உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினார். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவைச் சேர்ந்த 120 வீரர்கள், மீட்புப் பணிக்காக ஆந்திரா விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணிப்பதற்காக, மாநில விவசாய அமைச்சர் ரகுவீர ரெட்டி, கர்னூல் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். நாகார்ஜுன சாகர் அணையில், நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இருந்தாலும், இங்கு மின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் இறந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


கோவாவில் வெள்ளத்தில் சிக்கியது பஸ் : கோவாவில் பெய்த மழையால் பல கிராமங்கள் தத்தளிக்கிறது. கோவாவில் இருந்து மும்பை நோக்கி சென்ற 2 பஸ்கள் கோவா- கர்நாடாக எல்லை பகுதியில் ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இதில் மொத்தம் 150 யபணிகள் இருந்தனர். பயணிகள் நிலைமை என்னவென்று இது வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. வெள்ளம் சூழந்த பகுதிகளுக்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஆந்திரா : இதுவரை 33 இறந்துள்ளனர், 800 பேரை காணவில்லை. 4.5 லட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர்.பாதிப்படைந்துள்ளனர்.
கர்நாடகா : இதுவரை 152 பேர் இறந்துள்ளனர். 1 லட்சம் மக்கள் வீடு வாசல் இழந்து தவிக்கின்றனர். பலரைக் காணவில்லை.
கோவா: இதுவரை 250 வீடுகள் கனமழையால் தரைமட்டமானது. 2 பஸ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
-----------------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுகோள் : இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.  
நீங்கள் எந்த மதமயிருந்தாலும் சரி, எந்த ஜாதிய இருந்தாலும் சரி. ஒரு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தி, நன்றியுடன் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.
பெரு மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பத்தினருக்கு தக்க அன்பும் ஆறுதலும், புதிய பலம் கிடைத்திடவும், வீடு வாசல் இழந்து தவிக்கும் மக்களுக்கு முறையான உதவிகள் கிடைத்திடவும், செழிப்பான மறுவாழ்வு கிடைக்கவும், இது போன்று ஒரு சூழ்நிலைகள் இனி வராமல் இருப்பதற்காகவும், இப்படிப்பட்ட ஒரு அவலமான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொள்ளாதபடி நம்மைக் காத்து வருவதாலும், இனியும் காத்திடவும் இறைவனக்கு நன்றியை தெரிவித்து நன்றியுடன் வேண்டிக்கொள்வோம். 
கடவுளை நம்பாதவர்கள்...இயற்க்கைகளான, மழை, வெள்ளத்தைப் பார்த்து வேண்டிக்கொள்ளலாம்.
நன்றி.

Posted by போவாஸ் | at 9:09 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails