ரூ. 4 ஆயிரம் கோடியில் டயர் தொழிற்சாலை: கலைஞர் தலைமையில் ஒப்பந்தம்


பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மிச்சலின் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். 19 நாடுகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் பணி யாளர்களுடன் ஆண்டுக்கு 190 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்யக்கூடிய 69 தொழிற்சாலைகளையும், 3 தொழில்நுட்ப மையங்களையும், 2 ரப்பர் தோட்டங்களையும் கொண்டுள்ள மிச்சலின் நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 1079 பில்லியன் ரூபாய் அளவிற்கு விற்று முதல் செய்துள்ளது. 


இத்தகைய மிகப்பெரிய மிச்சலின் டயர் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் முதலீடுகளுக்குரிய சாதகமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமையவிருக்கும் சிப்காட் தொழில் வளாகத்தில் 290 ஏக்கர் நிலப்பரப்பில் டயர் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றினை அமைத்திட முடிவு செய்துள்ளது.


ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத்திட்டங்களைத் தவிர்த்து, மிச்சலின் நிறுவனம் ஒரே இடத்தில் அமைக்கும் இந்த மிகப்பெரிய டயர் உற்பத்தித்திட்டம், 7 ஆண்டு காலத்தில் 4000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யும்; 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கும். மேலும், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கான புதிய ஊக்கத்தினையும் இத்திட்டம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில், துணை முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்த மிச்சலின் டயர் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. 

இதில் தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச்செயலாளர் எம்.எப். பாருகி, மிச்சலின் இந்தியா தமிழ்நாடு டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் ஆப்பிரிக்கா இந்தியா மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான தலைவர் பிரசாந்த் பிரபு ஆகியோர் கையெழுத்திட்டனர்.


எல்லாத் தொழிற்ச்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் சென்னை மற்றும் சென்னையை சுற்றியே ஆரம்பித்தால் தமிழகத்தின் பிற பகுதிகள், இன்னும் பின் தங்கிய பகுதிகளாக இருக்குமிடமெல்லாம் எப்படி முன்னேற்றம் அடையும். தலை நகரத்திற்கு தொழிற்ச்சாலைகளும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும் தேவைதான் அதே சமயத்தில் சென்னை மட்டுமே தமிழ்நாடு அல்ல. சென்னை போல தமிழகத்தின் பிற பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டாமா?.
திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களும் இப்பொழுது மெருகேற்றப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தும் தோதுவாக உள்ளது.
தொழிற்ச்சாலை சம்பந்தமாக ஆட்கள் வந்து செல்லவும், மிஷினரிகள் வரவும் எந்த ஒரு குறைபாடு இல்லை. எல்லா வசதிகளும் உள்ளன. திருநெல்வேலி முதல் திருச்சி வரை...தொழிற்சாலை தொடங்க ஏராளமான இடங்களும், சாத்தியங்களும் உள்ளன. வேலைக்காக மக்களும் பலர் உள்ளனர். இன்னும் ஏன் தமிழக அரசு தென் மாவட்டங்களில் தொழிற்சாலை தொடங்க அந்நிய முதலீட்டார்களுக்கு ஊக்குவிக்க, தெரிவிக்க யோசிக்கின்றன. வாய்ப்பு அளிக்க மறுக்கின்றன என்று தெரியவில்லை.
சமீபத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மூலமாக இந்தோனிசியா கம்பெனி ஒன்று மதுரையில் டிராக்டர் தொழிற்ச்சாலை தொடங்க முன் வந்திருப்பதும் அதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி, கொஞ்சம் ஆறுதலைத் தருகின்றது. இது போல பல தொழிற்ச்சாலைகள் தொடங்க வேண்டும், வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். தமிழக அரசும் தென் மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் தொடங்க பரிந்துரைக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 5:22 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails