இந்தியாவில் முதன்முதலாக ஸ்டான்லி மருத்துவமனையில் ‘ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி மையம்


சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ 20 கோடி செலவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் துணை முதல்வர் பேசுகையில், முதல்வர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மருத்துவத் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையால் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர் என்று கூறினார்.
இம்மருத்துவமனைக்கு அகில இந்தியாவில் இருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து செல்கின்றனர். இந்தக் கட்டடம் 2007 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. பட்டி தொட்டிகளில் வாழும் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.9,744 கோடி மருத்துவத் துறைக்காக செலவிடப்பட்டுள்ளது என்றார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேசுகையில், மூளை செயலிழந்து இறந்து போகும் நோயாளிகள் கொடையாக அளிக்கும் உடல் உறுப்புகளைப் பராமரிக்கும் மய்யம் இன்று திறக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவியும் ஏற்கெனவே தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர் என்று கூறினார். இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி மய்யத்திற்கு தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி வழங்-கப்பட்டுள்ளது. இது பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்ச்சி என்று கூறினார்.
இவ்விழாவில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறைச் செயலாளர் சுப்புராஜ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்-குநர் விநாயகம், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பிரியா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Posted by போவாஸ் | at 10:37 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails