மீன்பிடி மசோதா தள்ளிவைப்பு & சரத்பவாருக்கு கருணாநிதி நன்றி


மீன்பிடி சட்ட மசோதாவை ஒத்தி வைத்ததற்கு முதல்- அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று மத்திய வேளாண் மந்திரி சரத்பவாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி இருப்பதாவது:-


மீன்பிடி தொழிலை சீரமைக்க மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் குறித்து கடந்த 19-11-2009 அன்று நான் ஒரு கடிதம் எழுதி உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இந்த சட்ட திருத்தம் மீனவர்கள் நலனுக்கு சரியானது அல்ல என்று நான் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.

மேலும் மீன்பிடி திருத்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் தமிழக மீனவர்களின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக இருப்பதை நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இது தொடர்பாக மத்திய மந்திரி தயாநிதிமாறன் உங்களை சந்தித்துப் பேசி ஆலோசித்தது நினைவு இருக்கலாம்.

என்னுடைய அறிவுரையை ஏற்று இந்த சட்ட திருத்தம் குறித்து நீங்கள் உடனடி முடிவு எடுத்தீர்கள். அதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நீங்கள் மீனவர்கள் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காது என்று அறிவித்தீர்கள். இதன் மூலம் மீனவர்கள் மனதில் இருந்த பயத்தை நீக்கினீர்கள்.

பாராளுமன்றத்தில் மீன்பிடி சட்ட திருத்த மசோதாவை கொண்டுவராமல் ஒத்திவைக்கும் முடிவை எடுத்ததற்காக என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடி சட்டத்தை திருத்தும் மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன்பு அனைத்து தரப்பினருடன் விரிவான, விளக்கமான விவா தம் நடத்தப்படும் என்று கூறினீர்கள். இதற்கும் என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வராமல் இருந்ததற்காக தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பில் நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்களின் பிரச்சினையை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்ததற்கு உங்களுக்கும் (சரத்பவார்) மத்திய அரசுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 10:50 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails