காமராஜருக்கு பெருமை சேர்த்தது திமுக: ஸ்டாலின்
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் தனது 2-வது நாள் பிரசாரத்தை திருச்செந்தூர் அருகேயுள்ள முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியது:
கடந்த 2 நாள்களாக இங்கு முகாமிட்டு பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா முரண்பட்ட ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். காமராஜர் பெயரை திமுக மறைத்து வருவதாக அவர் கூறிச் சென்றுள்ளார்.
அதிமுக ஆட்சி நடைபெற்றபோது தான் காமராஜர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அழைக்கக்கூட இல்லை. சமுதாயப் பெரியவர்கள் கலந்துகொண்ட அந்த விழாவில், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.
மேலும், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என, சமுதாய மக்கள் வைத்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக அரசு பதவியேற்றதும் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அவருக்கு பெருமை சேர்த்தவர் முதல்வர் கருணாநிதி.
காமராஜர் மறைந்தபோது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவருக்கு உரிய மரியாதை செலுத்தியதுடன், நினைவிடம் அமைக்க இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்தார்.
கன்னியாகுமரியில் கடற்கரையோரம் காமராஜர் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டபோது, முதல்வர் கருணாநிதியும் அதனை வலியுறுத்தினார். கடற்கரையில் எந்த கட்டடமும் கட்ட அனுமதி கிடையாது என்ற சட்டம் அமலில் இருந்ததால், மத்திய அரசிடம் வலியுறுத்தி காமராஜர் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, சென்னையில் உள்ள வெளிநாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதனை நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி.
பள்ளிக் குழந்தைகளுக்காக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார் காமராஜர். அத் திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார். தற்போது அதனை மேலும் மேம்படுத்தி வாரத்தில் மூன்று முட்டைகளுடன் வழங்கி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
இவற்றையெல்லாமல் அறியாமல் ஜெயலலிதா முரண்பட்ட கருத்துகளைக் கூறி வருகிறார்.
திமுக அரசு தொடர்ந்து மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், மகப்பேறு உதவியாக கர்ப்பிணிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் 3 முட்டை என திட்டங்களைக் கூறிக் கொண்டே போகலாம் என்றார்.
0 கருத்துக்கள்:
Post a Comment