மூட நம்பிக்கையின் விளைவினை பாரீர்.

நிலத்தில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாகக் கூறி நள்ளிரவில் பிராந்தி பூஜை நடத்தி மோசடி செய்த ஜோதிடரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். 

கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் மணமேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி. விவசாயியான இவர் உறவினரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். 

ஒரு வாரம் முன்பு திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்ற ஜோதிடர் தங்காயூர் பகுதிக்கு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.
முத்துசாமி, தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை ஜோதிடர் ராஜேந்திரனிடம் காட்டினார்.

அப்போது, 'உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் விவசாயம் செய்யும் நிலத்தில் புதையல் உள்ளது. அதை கண்டுபிடித்து எடுக்க ரூ.30,000 செலவாகும்' என்று ஜோதிடர் கூறியுள்ளார்.

ஜோதிடரை நம்பிய முத்துசாமி முதல்கட்டமாக ரூ.10,000 கொடுத்துள்ளார். முதலில் ஜோதிடர் அந்த மண்ணை வைத்து வேறு இடத்தில் பூஜை செய்தார். பின் நேற்று முன்தினம் வந்து நள்ளிரவு பூஜை நடத்த வேண்டும் என ஜோதிடர் கூறினார்.

5 கோழி, 50 பாட்டில் குவார்ட்டர் பிராந்தி ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லி பூஜை செய்தார். பூஜை முடித்த பின் குவார்ட்டர் பாட்டில்களை காலி செய்யுமாறு மற்றவர்களை வற்புறுத்தி, தானும் குடித்தார் ஜோதிடர்.

அனைவரும் போதையில் இருந்த சமயத்தில், ஜோதிடர் ராஜேந்திரன் தான் ஏற்கனவே பையில் மறைத்து கொண்டு வந்த மீனாட்சி சிலை, புத்தர் சிலை, அம்மன் சிலையை எடுத்து, 'புதையல் கிடைத்துவிட்டது' என ஆரவாரமாக கத்தினார். 

புதையல் என்றால் பணமோ தங்கமோ இருக்கும் என நினைத்திருந்த கிராமத்தினர், சிலைகளை கண்டதும் ஆத்திரமடைந்தனர். மேலும் ஜோதிடர் பையில் இருந்து சிலைகளை எடுத்ததையும் அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

இதில் மிகவும் ஆத்திரமடைந்த முத்துசாமி, பெருமாள், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அதே இடத்தில் ஜோதிடர் ராஜேந்திரனை நையப் புடைத்தனர்.

மேலும், ஜோதிடரின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'எங்களை ஏமாற்றிய உங்கள் கணவரை பிடித்து வைத்திருக்கிறோம். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துவிட்டு கணவரை மீட்டு செல்லுங்கள்' என்று முத்துசாமி உள்ளிட்டோர் மிரட்டினர். 

ஜோதிடர் மனைவி மணி, இதுகுறித்து இடைப்பாடி போலீசிடம் உடனடியாக புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து ஜோதிடரை மீட்டனர். 

புதையலில் எடுத்ததாக கூறப்பட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார்கள் பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------------------------------------------
டுபாக்கூர் ஜோதிடரை அடித்து விரட்டி விடலாம்..மிஞ்சி போனால் சிறையில் சில காலங்கள் உள்ளே தள்ளலாம். 

ஆனால், 
பொன், பொருள், புதையலுக்கு ஆசைப்பட்டு ஜோதிடரின் பேச்சுக்கு 'ஆமாம் சாமி' போட்டு, கோழியையும், பிராந்தியையும் வாங்கி கொடுத்த 
மதியில்லாத முத்துசாமி மற்றும் அவரது சகாக்களையும், ஜோதிடரை அடித்து உதைத்த கிராம மக்களை என்ன செய்வது ?.

மூடநம்பிக்கை என்ற போதையினால் அறிவு மங்கி போயிருக்கும் இவர்களை என்ன செய்வது ?.

இந்த சம்பவத்தாலாவது இவர்களது அறிவுக் கண் திறந்திருக்குமா ?.

இனியாவது இது போன்ற நபர்கள் திருந்த வேண்டும்.

இன்னொரு முறை பெரியார் வர முடியாது. பெரியாரின் கொள்கைகளையாவது படிக்க வேண்டும். 

பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் ஒன்றாம் வகுப்பு முதல், பாடத்தில் சேர்க்க வேண்டும். 100 மாணவ மணிகளில், ஒரு 10 பேராவது யோசிப்பார்கள். உணருவார்கள். மூடநம்பிக்கையில்லாத பகுத்தறிவு மனிதனாக வருவார்கள்.

ஒரு சிறப்பான சமுதாயம் அமையும்.

Posted by போவாஸ் | at 7:17 PM

1 கருத்துக்கள்:

puduvaisiva said...

"பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் ஒன்றாம் வகுப்பு முதல், பாடத்தில் சேர்க்க வேண்டும். 100 மாணவ மணிகளில், ஒரு 10 பேராவது யோசிப்பார்கள். உணருவார்கள். மூடநம்பிக்கையில்லாத பகுத்தறிவு மனிதனாக வருவார்கள்."

மிக நல்ல யோசனை
இது நிறைவேறினால் நல்ல ஒரு புதிய சமுதாயம் உருவாகும்

Post a Comment

Related Posts with Thumbnails