வேகமாக உருகும் ஆர்க்டிக் பனி சொந்த இனத்தையே அழிக்கும் துருவக்கரடிகள்

புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக துருவக்கரடிகளின் வேட்டைப் பரப்பு சுருங்கியுள்ளதால் அவை தமது சொந்த இனத்தையே தின்று அழிக்கத்துவங்கியுள்ளதாக ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. 

துருவக்கரடிகள் பெரும்பாலும் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியிலேயே வாழ்கின்றன. அதையொட்டிய ஆர்க்டிக் கடல் மற்றும் நிலப்பரப்பில் அவற்றின் வாழ்விடம் பரந்துள்ளது. நிலத்தில் வாழும் மாமிச உண்ணிகளிலேயே மிகப்பெரியது என்று அறியப்படும் துருவக்கரடிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. வரைமுறையற்ற வேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. மொத்தம் உள்ள 19 துருவக்கரடி இனங்களில் 5 இனங்கள் இத்தகைய பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக கடல்வாழ் உயிரினமான சீல் எனும் கடற்சிங்கம் துருவக்கரடிகளின் விருப்பமான இரையாகும். ஆனால் தற்போது புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் துருவக்கரடிகளின் வேட்டைப்பரப்பு சுருங்கியுள்ளது. கரடிகளால் நிலத்தில் வேட்டையாடுவதைப் போல அவ்வளவு எளிதாக கடலினுள் நீந்திச் சென்று வேட்டையாட முடிவதில்லை. இதன் காரணமாகவே அவை இவ்வாறு தமது சொந்த இனத்தையே இரையாக உட்கொள்ளத் துவங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் கனடாவின் ஹட்சன் வளைகுடா பகுதியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை உதாரணமாகக் காட்டுகிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் ஒரு ஆண் துருவக்கரடி மற்றொரு கரடியின் தலையை இரத்தத்துடன் கொணர்வது படம் பிடிக்கப்பட்டிருந்ததாம். உண்மையில் அனைத்து கரடி இனங்களும் தங்களது சொந்தக்குட்டிகளையே இரையாக உட்கொள்ளும் தன்மை கொண்டவையாகும். துருவக்கரடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும், தற்போதைய நிகழ்வுகள் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியவையல்ல என்கிறார்கள் உயிரியல் ஆர்வலர்கள்.

ஹட்சன் பகுதியில் அண்மைக்காலத்தில் குட்டிகளை உணவாகக் கொள்ளும் தன்மை துருவக்கரடிகளிடையே வழக்கத்தை விட மிக அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். ஜான் குன்டர் என்பவர் இதுகுறித்து கூறுகையில், ஒரு துருவக்கரடி தனது குட்டியையே இரையாக உட்கொண்டு தான் கடைசியாக பார்த்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார். அதுவும் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இவ்வாறு வெறும் 3 சம்பவங்களே நடந்துள்ளன என்கிறார் அவர். ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கவலையுடன் கூறுகிறார் அவர். 

இந்த ஆண்டு துருவக்கரடிகள் தங்களது உடலில் சேகரமாக உள்ள கொழுப்பை நம்பியே பெரும்பாலான நாட்களைக் கழித்துள்ளன என்று கூறும் ஆய்வாளர்கள், பனிப்பொழிவு மீண்டும் துவங்கும் என்று அவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும், பசி தாங்க முடியாததால்தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடத்துவங்கியுள்ளன என்றும் கூறுகிறார்கள். 

தற்போது டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் புவி வெப்பமடைதல் குறித்த முக்கிய மாநாடு நடந்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted by போவாஸ் | at 8:24 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails