அரசின் சாதனைகளை சொல்லி உரிமையுடன் ஓட்டு கேட்கிறேன் : கலைஞர் கருணாநிதி.
"தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு ஓட்டு கேட்போம்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:திருச்செந்தூர், வந்தவாசியில், வரும் 19ம் தேதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது.கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரியும், அப்பகுதி மாவட்ட செயலர்களும் திருச்செந்தூரிலேயே முகாமிட்டு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகின்றனர்.
அதுபோலவே, வந்தவாசி தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் வேலுவும், அந்த பகுதி மாவட்ட செயலர்களும் முகாமிட்டு, பம்பரமென சுழன்று, தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றனர்.பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மற்றும் பலர் இந்த இரண்டு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் என்பதாலும், என் உடல்நிலை கருதியும், நான் நேரடியாக அந்த தொகுதிகளுக்கு வரவில்லை.
எதிர் தரப்பினர், இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பது, அரசின் மீது என்ன குற்றம் சாட்டுவது எனத் தெரியாத நிலையில், குழப்பமடைந்து ஏதேதோ பேசி வருகின்றனர். அருந்ததிய சமுதாயத்துக்கு பல ஆண்டுகளாக கேட்டுக் கிடைக்காத கோரிக்கையான 3 சதவீத உள்ஒதுக்கீட்டை நாம் செய்து கொடுத்து, அதன் வாயிலாக அவர்கள் பெரும் பயன்பெற்று, அதற்காக, வள்ளுவர் கோட்டமே கொள்ளாத அளவுக்கு, எனக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினர்.
மூன்றாம் நாள், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர், திருச்செந்தூரிலே தேர்தல் பிரசார கூட்டத்தில், "அருந்ததிய சமுதாயத்துக்கு எதுவும் செய்யவில்லை' என்று பேசுகிறார் என்றால், அந்தத் தொகுதி மக்கள், அவரைப் பற்றி என்ன நினைப்பர் என்று தான் வருத்தப்படுகிறேன்.
நாம் ஓட்டு கேட்கிறபோது, நம் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லி, "எங்களை பதவியில் அமர்த்தினீர்கள். நாங்கள் சும்மா இருக்கவில்லை. இதோ, இவற்றைச் செய்திருக்கிறோம்' என்று பட்டியலிட்டுக் காட்டி, அதன் பெயரால் ஓட்டு கேட்க முடிகிறது.
அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சென்று, அவர்கள் ஆட்சியிலே செய்த கொடுமைகளைப் பட்டியலிட்டுத் தான் கேட்க முடியும்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும், தி.மு.க., அரசின் சாதனைகளில் ஏதாவது ஒன்றால் பயன்பெறுகின்றனர்.
அந்தச் சாதனைகளின் பெயரால், இத்தகைய சாதனைச் சரித்திரம் படைத்த ஆட்சியின் தலைவன் என்ற நிலையில் தான், அனைத்து மக்களிடமும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாக இருக்கிற உரிமையோடு, ஓட்டு கேட்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
0 கருத்துக்கள்:
Post a Comment