ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ?


ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது.இதனால் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒத்துக் கொண்டது.

 
ஆனால் இதற்கு ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2 நாட்கள் முழு அடைப்பு நடந்தது. இதில் வன்முறைகள் வெடித்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
 
தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு இந்த பகுதிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜியம் என கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை 5 எம்.பி.க்களும், 138 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
 
இப்போது ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை சேர்ந்த மந்திரிகளும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று ஐதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். அனைவரும் மந்திரி பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவு எடுத்தனர். இது பற்றி முதல்-மந்திரி ரோசய்யா விடம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து ரோசய்யா அனைத்து மந்திரிகளையும் அழைத்து பேசி சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவர்கள் சமாதானத்தை ஏற்கவில்லை. எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே ராஜினாமா செய்வதை தவிர வேறுவழியில்லை என்றனர்.
 
ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்ட நிலையில் மந்திரிகளும் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து இருப்பதால் முதல்-மந்திரி ரோசய்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ரோசய்யாவும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
 
இது பற்றி கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 நாட்களாக தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இதனால் ஆந்திரா பிரச்சினை தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை. நேற்று இரவு தான் டெல்லி திரும்பி இருக்கிறார். எனவே அவர் இன்று இது பற்றி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே சோனியா எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும். இதற்கிடையே ராஜினாமா முடிவு எடுத்த 24 மந்திரிகளும் இன்று மீண்டும் ரோசய்யாவை சந்திக்க போவதாக கூறி உள்ளனர்.
 
அதே போல அனைத்து எம்.பி.க்களும் இன்று ரோசய்யாவை சந்திக்க உள்ளனர். அப்போது அவர்கள் அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ரோசய்யாவுக்கு மேலும் அவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இது, ரோசய்யா முதல்-மந்திரி பதவியில் தொடர முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
 
ஏற்கனவே சட்டசபையில் உள்ள பாதி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டதால் அரசியல் சட்டசிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. இப்போது மந்திரிகளும் ராஜினாமா செய்துள்ளனர். அதோடு முதல்-மந்திரியும் ராஜினாமா செய்யும் நிலை உருவாகி உள்ளது. இது பெரும் சட்டசிக்கல்களை உருவாக்கும். இத்துடன் ஆந்திரா முழுவதுமே கலவரம் ஏற்பட்டு மாநிலமே ஸ்தம்பித்து உள்ளது.
 
இந்த சூழ்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தினால் தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே இது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
 
சட்டசபையை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
 
தற்போதைய நிலையில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தவிர வேறு வழி இல்லை என்று சட்டநிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
 
காங்கிரஸ் மேலிடம் ஆந்திரா பிரச்சினை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. தற்போதைய பிரச்சினைகளை முதல்-மந்திரி ரோசய்யா சரியாக அணுகி தீர்வு காணவில்லை என்ற அதிருப்தி கட்சி மேலிடத்திடம் இருக்கிறது. எனவே ரோசய்யாவுக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கும் முடிவையும் கட்சி மேலிடம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Posted by போவாஸ் | at 3:03 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails