அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரையை முதல்வர் திறக்கிறார்
அழகுபடுத்தப்பட்டுள்ள மெரினா கடற்கரையை முதல்வர் கருணாநிதி டிசம்பர் 20}ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுநர்கள், களப்பணியாளர்கள், தொழில்பயிற்சி முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது:
சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்காக, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் இதுவரை 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக விளங்கும் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள், முடிவடைந்துள்ளன. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3.10 கி.மீ. நீளத்துக்கு ரூ. 25.92 கோடியில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அழகுபடுத்தப்பட்டுள்ள மெரினா கடற்கரையை முதல்வர் கருணாநிதி வரும் 20}ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
இதுபோல் ரூ. 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் அடையாறு பூங்காவை, 2010 நவம்பர் மாதம் முதல்வர் திறந்து வைப்பார். கூவத்தைச் சீரமைக்க எனது தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியும் நிறைவேற்றப்பட்டு சென்னை மக்களுக்குப் பரிசாக அளிக்கப்படும் என்றார்.
விழாவில் 4 மருத்துவர்கள், 7 மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளும், 107 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்களும், தொழிற்பயிற்சி முதல்வர் உள்பட 7 அலுவலர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் மற்றும் 15 மலேரியா களப் பணியாளர்களுக்கு ஆணைகளும் வழங்கப்பட்டன.
மேயர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் ஆர். சத்தியபாமா, கவுன்சில் எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்
0 கருத்துக்கள்:
Post a Comment