தமிழ்ப் படங்களைக் கொண்டாட வரும் 'தமிழ் படம்'

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தில் இருந்து வரும் மற்றொரு தயாரிப்பாளர், தயாநிதி அழகிரி. இவர் தயாரிக்கும் முதல் படத்திற்குத் 'தமிழ் படம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்த சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாகச் சிவா நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த தீஷாபாண்டே அறிமுகம் ஆகிறார்.

வித்தியாசமான தலைப்புடன் வரும் 'தமிழ் படம்', இதுவரை ரசிகர்களை வேறு எந்தத் தமிழ்ப் படமும் சிரிக்க வைக்காத அளவிற்குச் சிரிக்க வைக்குமாம். படம் மட்டும் அல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றும் புதுமையாக இருக்குமாம். அதில் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் வித்தியாசமான சத்தங்களை வைத்து 'ஒமகஷியா...' என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பாடலை இலங்கையில் படம் பிடித்துள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா போன்ற நடிகர்கள் இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக வலம் வருகிறார்கள். மேலும் டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், பரவை முனியம்மா, பெரியார்தாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

"தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு புதுமையான நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் 'தமிழ் படம்', தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொண்டாடும் விதத்தில் அமைந்திருக்கும்" என்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்த டி.சந்தானம் இப்படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

கண்ணன் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டத்தைக் கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக்கொண்டார். இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் 2009, டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது

Posted by போவாஸ் | at 4:58 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails