பருவநிலை மாற்றத்தால் இடம்பெயரும் மக்கள் !!
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர் என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: பருவநிலை மாற்றத்தால், வரும் 2050ம் ஆண்டு, இரண்டரை கோடி முதல் 100 கோடி மக்கள் வரை இடம் பெயர்வர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள், இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர். இவ்வாறு பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறியோர், பலர் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர், ஏற்கனவே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதால், அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பெரும்பாலான நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் இடம் பெயர்தலை தங்கள் நாட்டுக்குள்ளேயே சமாளித்துக் கொள்கின்றன. ஆனால், சிறிய தீவுகள், கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் போது சர்வதேச அளவில் இடம் பெயரும் நிலை உண்டாகிறது.
மேலும், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள் வரை இடம்பெயர்வர் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:
--------------------------------------------------
பருவ நிலை மாற்றத்தால் பலவித நோய்கள் பாதிப்பு
பருவ நிலை மாற்றத்தால் பலர் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஜலதோஷம், காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, தோல் நோய்களால் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:
தமிழகத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பருவநிலை மாற்றத்தால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் உடல்நிலை பாதிப் பால் அவதிப்படுகின்றனர். கடந்த 10 நாட்களாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் 20 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மாறுபட்ட சூழ்நிலையை உணர்ந்து குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
மனித உடல் 99.4 பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும். இதன் அளவு குறையும்போது நுரையீரல் பாதிப்பு காரணமாக சுவாச மண்டல நோய் வரும். இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அதனால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடக் கூடாது. காய்கறி, பருப்பு, ரசம், காளான், பூண்டு, இஞ்சி போன்ற பொருட்களில் தயார் செய்யும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
ஏசியை தவிர்க்க வேண்டும். பருத்தி, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். மார்பிள், டைல்ஸ் தரையில் வெறும் காலுடன் நடக்க கூடாது. காய்ச்சிய குடிநீரையே குடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதால், தலையை காப்பாற்றிக் கொள்வதுடன், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.
1 கருத்துக்கள்:
இது இனி எங்கும் நடக்கும் விஷயமாகும்.. பொருளாதார தேவைக்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் கலாச்சாரத்தில் - விஷமாகிறது உலகம்..!! ஓடி பிழைக்கவும் இடம் இல்லாத பூமி வெகு தொலைவில் இல்லை..!!
Post a Comment