சீனாவை விட செழிப்பாக உள்ளது இந்தியா - ஆய்வு
இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்தில் உள்ளது.
லிகேட்டம் பிராஸ்பரிடிட்டி இன்டெக்ஸ் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45வது இடமும், சீனாவுக்கு 75வது இடமும் கிடைத்துள்ளன.
உலகின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 104 நாடுகளின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தொகுத்து இந்த தரவரிசைப் பட்டியலை லிகேட்டம் வெளியிட்டுள்ளது. இது 3வது சர்வே ஆகும்.
பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொணடு இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவை விட சீனா பல்வேறு பொருளாதாரப் பிரிவுகளில் எங்கேயோ உள்ளது. ஆனால் சீனாவிடம் இல்லாத ஜனநாயகம், சகிப்புத்தனமை, இனக் குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஒருமைப்பாடு, சிறுபான்மையினரை மதிக்கும் தன்மை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவை காரணமாக, இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டது.
இதுதுறித்து லிகேட்டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்லியம் இன்போடன் கூறுகையில், மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்றும் அருமையான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பேணுவதில் இந்தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியில், சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணி பெற்றுள்ளது என்றார்.
ஒவ்வொரு பிரிவிலும் இந்தியா பெற்றுள்ள ரேங்கிங்..
சமூகப் பிரிவில் இந்தியா, அமெரிக்காவை விட முன்னுக்கு உள்ளது. அதாவது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவும் தன்மை, இல்லாதவர்களுக்கு உதவுவது, தொண்டுப் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது, குடும்பத்தினர், நண்பர்கள் என்று உறவுமுறைகளை வலுவாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இந்தியா சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 6வது இடத்திலும், இங்கிலாந்து 7 மறறும் பின்லாந்து 8வது இடத்திலும் உள்ளன.
கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. சுகாதாரத்தில் 88வது இடத்தையும், கல்வியில் 86வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.
நவீனமயமாக்கல், சிறு தொழில் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் தர வரிசை 55.
இந்த தரி வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள்..
பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, அமேரிக்கா , நியூசிலாந்து.