தாய்நாடு திரும்பியவுடன் செய்ய வேண்டியவை

12 Aug 09 தாய்நாடு திரும்பியவுடன் செய்ய வேண்டியவை

ஒரு என்.ஆர்.ஐ இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பியவுடன் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பான காரியங்கள் என்னென்ன?

1. ஒரு என்.ஆர்.ஐ தாய்நாடு திரும்பியவுடன் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் அவர் திரும்பி வந்துவிட்ட தகவலை வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வங்கி என்.ஆர்.இ மற்றும் எஃப்.சி.என்.ஆர் கணக்குகுளை ரெசிடென்ட் கணக்குகளாக மாற்றுவார்கள். இந்தக் கணக்குகளில் வழங்கப்படும் வட்டியை மாற்ற மாட்டார்கள். ஆனால் இந்தியா திரும்பிய நாள்முதல் வருமானவரி செலுத்திட வேண்டும்.

2. என்.ஆர்.ஐ இந்தியா திரும்பியவுடன் ரெசிடென்ட் ஃபாரின் கரன்சி கணக்கு தொடங்கலாம். தனது கையில் உள்ள அன்னியச் செலாவணியையும் அவருக்குப் பிறகு வரக்கூடிய அன்னியச் செலாவணியையும் இந்தக் கணக்கில் ஒரு என்.ஆர்.ஐ வரவு வைக்கலாம்.

3. அவருக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் இருந்தால் அதன் விவரங்களை எழுத்து மூலம் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஃபெமா சட்டத்தின் 6(4) பிரிவின்படி (1999ம் ஆண்டு) வெளிநாட்டில் உள்ள அசையாச் சொத்துக்கள், அன்னிய முதலீடுகள், அன்னியக் கரன்சி ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்தபோது ஈட்டியிருந்தால் அவற்றை ஒரு என்.ஆர்.ஐ தாய்நாடு திரும்பும்போது கொண்டுவரலாம்.

4. வெளிநாடு வங்கிகளில் அன்னியக் கரன்சி கணக்கு இருந்தால் அவற்றை பாரத ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம்.

5. வெளிநாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டு பாலிசி பெற்றிருந்தால், அது முதிர்வடையும்வரை வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பிரீமியம் தொகையை வெளிநாட்டு கணக்கு மூலமாகவோ அல்லது உள்நாட்டில் உள்ள ஆர்.எஃப்.சி கணக்கில் இருந்தோதான் செலுத்த முடியும்.

6. கம்பெனிகளின் ஷேர்கள், கடன் பத்திரங்கள் (டிபென்ச்சர்கள்) மற்றும் டெபாசிட்கள் ஆகியவை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு என்.ஆர்.ஐ.கள் தாய்நாடு திரும்பியவுடன் தாங்கள் திரும்பி வந்துவிட்ட தகவலையும் அவர்களது உள்நாட்டு முகவரியையும் தவறாமல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) மற்றும் வட்டி அனுப்புவதற்கும் மேற்கூறிய முதலீடுகள் உள்நாட்டு முதலீடுகள் என்று குறித்துக்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
- எஸ். கோபாலகிருஷ்ணன்

நன்றி : குமுதம் இணையதளம்

Posted by போவாஸ் | at 1:03 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails