மக்களைக் குழப்பாதீர்கள்!: டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கண்டிப்பு

11 Aug 09 மக்களைக் குழப்பாதீர்கள்!: டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கண்டிப்பு

மக்களைக் குழப்பாதீர்கள்!: டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கண்டிப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் எனக் கூறி, மக்களைக் குழப்பாதீர்கள் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.

பா.ம.க. சார்பு அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மற்றும் தேர்தல் சீர்திருத்தத்திற்கான தேசிய பேரவை சார்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்த செயல் விளக்கம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, செயல் விளக்கத்துக்குப் பின் கூறியது:

மின்னணு வாக்குப் பதிவு முறையில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இதுபோன்று தனி நபர்கள், தனி அமைப்புகள் உருவாக்கும் இயந்திரங்களை வைத்துக் கொண்டு “முறைகேடுகள் செய்ய முடியும்’ என செயல் விளக்கம் நிகழ்த்துவது சரியல்ல.

இது மக்கள் மத்தியில் குழப்பங்களையும், தவறான எண்ணங்களையும்தான் ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கைகள் மீதே மக்கள் அவநம்பிக்கை கொள்ள நேரிடும்.

தேர்தல் நேரத்தில் எந்தெந்த வாக்குப் பதிவு இயந்திரம் எந்தெந்த தொகுதிக்கு செல்கிறது என்பது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. வாக்குப் பதிவுக்கு ஒருசில தினங்களுக்கு முன்புதான் அது முடிவு செய்யப்படும். இந்நிலையில் அந்த இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்ய முடியும் என தெரியவில்லை. வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான குறைபாடுகளைக் கூற விரும்புவோர், தேர்தல் ஆணையத்தை அணுகி, தங்கள் முறையீட்டை தெரிவிப்பதே சரியாக இருக்கும். ஏற்கெனவே இது தொடர்பாக இந்தியாவின் 2 பெரிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

அப்போது முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க விரும்புவோர், தேர்தல் ஆணையத்திடம் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்றார் கிருஷ்ணமூர்த்தி

Posted by போவாஸ் | at 12:52 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails