சென்னை மக்களுக்கு இனி ஒரே குஷிதான்

07 Aug 09 சென்னை மக்களுக்கு இனி ஒரே குஷிதான்

சென்னை மாநகர மக்கள் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் கடல் நீரிலிருந்து உருவாக்கப்படும் குடிநீரை அருந்தும் பாக்கியத்தைப் பெறவுள்ளனர். இதுதொடர்பான திட்டப் பணிகள் முடியும் தருவாயை நெருங்கி விட்டன.

சென்னை மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கடல் நீரைக் குடிநீராக்கும் மிகப் பெரிய திட்டம் தீட்டப்பட்டது.

இத்திட்டத்தின்படி, தினசரி 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும். தமிழ அரசால் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் மிகப் பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் திட்டத்திற்கு கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி துணை முதல்வர் (அப்போது உள்ளாட்சி அமைச்சர்) மு.க.ஸ்டாலின அடிக்கல் நாட்டினார்.

இந்த கடல் நீர் குடிநீராக்கல் திட்டப் பணிகள் தற்போது 96 சதவீத அளவுக்கு பூர்த்தி அடைந்து விட்டது. தற்போது கடலிலிருந்து நீரை எடுத்து சுத்திகரிக்க அனுப்பும் குழாய்கள் மற்றும் சுத்திகரித்த பின்னர் கடலில் விடப்படும் நீரைக் கடத்தும் குழாய்களைப் பதி்க்கும் பணிகள் மட்டும் கொஞ்சம் பாக்கி உள்ளது.

மீஞ்சூர் நிலையத்திலிருந்து மாதவரம் மெட்ரோ வாட்டர் பம்பிங் நிலையம் வரை 23 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் பம்பிங் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி காட்டுப்பள்ளி சென்று ஆய்வு செய்தார். அனைத்துப் பணிகளும் முடியும் கட்டத்தை நெருங்கி விட்டதாக அப்போது சென்னை கடல் நீர் குடிநீராக்கல் திட்ட கழக அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அக்டோபர் 2ம் தேதி முதல் சென்னை நகர மக்கள் கடல் குடிநீரைப் பெறுவார்கள் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.

இந்த பிரமாண்டமான திட்டத்தை வடிவமைத்து, கட்டி, சொந்தமாக்கி, செயல்படுத்தி, மாற்றித் தருவது (DBOOT)
என்ற அடிப்படையில், ஸ்பெயினைச் சேர்ந்த பெஃபேசா கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜியா ஆம்பியென்சஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஐவிஆர்சிஎல் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் திட்டக் கழகம் நிறைவேற்றி வருகிறது.

இந்தத் திட்டத்தை உருவாக்கும் பொருட்டு தமிழக அரசால், சென்னை கடல் நீர் குடிநீராக்கல் கழகம் உறுவாக்கப்பட்டது. இந்த கழகத்திடமிருந்து சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் தண்ணீரைப் பெற்று சென்னை மக்களுக்கு விநியோகிக்கும்.

இதுதொடர்பாக ஏற்படுத்ப்பட்டுள்ள ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி விநியோகிக்கும் சென்னை மெட்ரோ வாட்டர். அதன் பின்னர் கடல் நீரைக் குடிநீராக்கல் திட்டம் மெட்ரோ வாட்டருக்கே சொந்தமாகி விடும்.

கடல் நீர் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் சென்னை மாநகர மக்களின் தண்ணீர் தாகத்திற்கு கிட்டத்தட்ட நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Posted by போவாஸ் | at 12:37 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails