நகைச்சுவை துணுக்குகள்

11 Aug 09 நகைச்சுவை துணுக்குகள்



காலை வைத்துக் கண்டுபிடி

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.

மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான்.

பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.

தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார்.

மாணவர்களைப் பார்த்து, “நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு” என்றார்.

ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.

பேராசிரியரைப் பார்த்து, “இப்படியா தேர்வு வைப்பது?

உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை” என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார்.

வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“அப்படி வாருங்கள் வழிக்கு” என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, “இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றான்.

சிங்கத்திற்கு அஞ்ச வேண்டாம்

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.
அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.

மழைக்குத் தேவை குடை

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண் ர் ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

ஏமாற்ற முடியாத முதலாளி

முதலாளி: ஏண்டா! டின்ல எண்ணெய் குறையுது.
வேலைக்காரன்: டின் அடியில் சின்ன ஓட்டை இருந்திருக்கு. நான் கவனிக்கலே.
முதலாளி: டேய்! டின்ல மேலேதான் எண்ணெய் குறையுது. அடியில் ஓட்டை என்று கதை விட்டு என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்?

வேலைக்காரனின் பதில்

முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா? ஒரு மாத தூசி படிந்திருக்கும் போலத் தெரிகிறதே?

வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச் சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.

பழக்கத்தை விடுவது எளிது

புகை பிடிக்கறதை விடறது கடினம் என்று நான் நினைக்கலே. நானே இதுவரை நூறு தடவைக்கு மேல் அதை விட்டிருக்கேன்.

நல்ல ஐயம்

ஏன் இந்த நெருப்புக் குச்சி இப்ப எரிய மாட்டேங்குதுன்னு தெரியலியே. போன தடவை பத்தவச்ச போது நன்றாக எரிந்ததே.

பதில் எழுதும் முறை

ஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி, இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்காவிட்டால் உடனே எனக்கு மடல் எழுது.

திடீர் பணக்காரர்

மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?
கணவன்: நீ தானே “டெய்லி காலண்டர்” வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
சோமு: பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

மேனேஜர்: இந்த ஆபிசுக்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட… அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..

உண்டியலில் பணம்

தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.

“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.

“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

யார் அங்கே?

அமெரிக்கன், ஆங்கிலேயன், ஐரிஷ்காரன் ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி “இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள்.
“இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்” என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் “மியாவ்” என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கேட்டான்.
“மியாவ்” என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஐரிஷ்காரன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, “யார் அங்கே” என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
“நான் தான் பூனை” என்று பதில் சொன்னான் ஐரிஷ்காரன்

Posted by போவாஸ் | at 12:59 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails