'தேசியக் கட்சிகளுக்கு இணையானது திமுக’: கருணாநிதி

11 Aug 09 “தேசியக் கட்சிகளுக்கு இணையானது திமுக’: கருணாநிதி

“தேசியக் கட்சிகளுக்கு இணையானது திமுக’: கருணாநிதி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் “அனிதா’ ஆர்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேருடன் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தார். இதற்கான நிகழ்ச்சி, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மாலை நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

1949-ல் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவைத் தொடங்கினார் அண்ணா. அப்போது, சென்னையில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் கிளைகளை ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும், ஒவ்வொரு நகரத்திலும் கொடியேற்றி தொடங்க வேண்டும் என்று அண்ணா உத்தரவிட்டார்.

அதன்படி, 1949-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தூத்துக்குடிக்கும், மறுநாள் கோவில்பட்டிக்கும் சென்று திமுக கொடியை ஏற்றி வைத்தேன்.

இந்தக் கட்சி தோன்றிய காலம் தொட்டு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள், இடர்பாடுகளை அனுபவித்த தலைமை பொறுப்பில் இருந்தவர்களில் நானும் (கருணாநிதி), பேராசிரியரும் இடம் பெற்றிருந்தோம்.

ஆச்சரியம் அளிக்கிறது… ஆட்சியிலும் இருந்த போதும், இல்லாத நேரத்திலும் “அனிதா’ ராதாகிருஷ்ணனை அறிந்து இருக்கிறேன். கட்சியில் பிடிப்பு உள்ளவர். “வட்டாரத்தில் தனக்கு எதிராக இருந்து கட்சியை வளர்த்தவர்’ என்று திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமியால் புகழப்பட்டவர்.

அப்படிப்பட்ட தளபதியை இழந்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து சேர்ந்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இதற்காக அவருக்கு நன்றி சொல்லவில்லை. அவரை அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தேசிய கட்சியாக… திமுக மாநிலக் கட்சி என்றாலும் கூட, மகத்தான தேசிய கட்சிகள் என்று சொல்லப்படக் கூடிய கட்சிகளுக்கு இணையானது என்பதை மறுக்க முடியாது.

எம்.பி.க்கள், சில மத்திய அமைச்சர்களை பெற்று இருக்கிறோம் என்பதால் அல்ல; உணர்வின் அடிப்படையிலும் திராவிட தேசிய இயக்கமாக உருவாகி வருகிறோம் என்பதற்கு அடையாளமாக பெங்களூர் நிகழ்ச்சி அமைந்து இருந்தது” என்றார் முதல்வர் கருணாநிதி.

இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புதிய வெள்ளமும் பழைய வெள்ளமும்

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியை பழைய வெள்ளம் என்றும், கட்சியில் இணைந்த “அனிதா’ ராதாகிருஷ்ணனை புதிய வெள்ளம் என்றும் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார்.

அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களை முதல்வர் கருணாநிதி வரவேற்றுப் பேசினார். அப்போது, ஒவ்வொருவரையும் வரவேற்றுப் பேசிய நேரத்தில், “”புதிய வெள்ளம் (ராதாகிருஷ்ணன்) வந்ததற்காக, பழைய வெள்ளத்தை (பெரியசாமி) மறந்து விடக் கூடாது” என்று கூறினார்.

Posted by போவாஸ் | at 12:51 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails